

இந்தியாவின் நம்பர் ஒன் கோடிஸ்வரராகவும் ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவருமான முகேஷ் அம்பானி உள்ளார். இவரது நிறுவனம் பல்வேறு துறைகளில் பரந்து விரிந்துள்ளது. முகேஷ் அம்பானி தனது குடும்பத்துடன் மும்பை ஆல்ட்டா மௌண்ட் சாலையில் அமைந்திருக்கும் அன்டிலியாவில் மிகவும் காஸ்ட்லியான பங்களாவில் வசித்து வருகிறார்.
இந்த நிலையில் முகேஷ் அம்பானி லண்டனில் செட்டில் ஆக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் இந்தியாவில் பல லட்சம் கோடி ரூபாய் வர்த்தகத்தை வைத்துள்ள போதிலும் ஆண்டுக்கு பாதி நேரம் மும்பையிலும், பாதி நேரம் லண்டனிலும் தங்க அம்பானி குடும்பத்தினர் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. சமீபத்தில் மும்பையில் தன் வீட்டருகே வெடிகுண்டுடன் நிறுத்தப்பட்ட கார் சம்பவத்திற்குப் பின்பு அம்பானி குடும்பம் இந்த முடிவுக்கு வந்திருப்பதாக கூறப்படுகிறது.
முன்னதாக, முகேஷ் அம்பானி பிரிட்டன் நாட்டில் இருக்கும் பக்கிங்ஹாம்ஷைர் பகுதியில் 300 ஏக்கர் பரப்பளவில் இருக்கும் ஸ்டோக் பார்க் என்ற ஆடம்பர நட்சத்திர ஹோட்டலை 592 கோடி ரூபாய்க்கு வாங்கினார். இந்தக் கட்டடத்தில் 49 பிரமாண்ட பெட்ரூம்களுடன் பல வசதிகள் உள்ளன. இந்த வீட்டிற்குத்தான் தற்போது முகேஷ் அம்பானி தனது குடும்பத்துடன் செல்ல உள்ளதாக பரபரப்பாக பேசப்படுகிறது.அதுமட்டுமின்றி தீபாவளி பண்டிகையை குடும்ப உறுப்பினர்களுடன் மும்பை அன்டிலியா வீட்டில் கொண்டாடும் அம்பானி இந்த முறை லண்டனில் கொண்டாடினார். இதனால் அம்பானி இந்தியாவை விட்டு வெளியேறுவதற்கு அதிகளவு வாய்ப்புகள் இருக்கின்றன என கருதப்படுகிறது. அதேசமயம் இதுதொடர்பாக அம்பானி தரப்பிலிருந்து எந்தவிதமான அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை.
