தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி அருகே உள்ள சக்கம்பட்டியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் சக்கம்பட்டியை சேர்ந்த நூறுக்கும் மேற்பட்ட குழந்தைகள் படித்து வருகின்றனர்.

இந்நிலையில் ஆண்டிப்பட்டி மற்றும் சுற்றுவட்டாரத்தில் நேற்று இரவு விடிய விடிய பலத்த மழை பெய்தது. இதன்காரணமாக பள்ளி வளாகத்திற்குள் குளம் போல தண்ணீர் தேங்கியது. சுமார் 3 அடி உயரத்திற்கு தண்ணீர் தேங்கி இருந்தது. இந்நிலையில் காலை பள்ளிக்கு வந்த குழந்தைகள் மற்றும் ஆசிரியர்கள் பள்ளிக்குள் செல்ல முடியாத அளவிற்கு தண்ணீர் தேங்கியிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இதனையடுத்து அந்த பள்ளிக்கு இன்று விடுமுறை அளித்து ஆசிரியர்கள் உத்தரவிட்டனர்.
சக்கம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியை பொறுத்த வரையில் ஒவ்வொரு முறை பலத்த மழை பெய்யும் போதெல்லாம் தண்ணீர் தேங்குவது வழக்கமாக இருந்து வருகிறது.

பல ஆண்டுகளாக தொடரும் இந்த பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என்று இப்பகுதி மக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
ஆனால் அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காததால் பொதுமக்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். தொடரும் இந்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு எடுக்க வேண்டும் இல்லையென்றால் பள்ளியை மூடிவிடுங்கள் என்று இப்பகுதி மக்கள் விரக்தியுடன் கூறுகின்றனர்.