• Thu. Apr 25th, 2024

பேரறிவாளன் விடுதலை: காங்கிரஸ் கட்சியினர் போராட்டம்

ByA.Tamilselvan

May 19, 2022

தமிழகம் முழுவதும் பேரறிவாளன் விடுதலைக்கு எதிர்ப்பு காங்கிரஸ் கட்சியினர் அறப்போராட்டத்தில் ஈடுபட்டனர்.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் இருந்து பேரறிவாளனை விடுதலை செய்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்த தீர்ப்பை பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் வரவேற்றுள்ளனர்.
தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்திருந்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, “உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை நாங்கள் விமர்சிக்க விரும்பவில்லை. அதேநேரத்தில், குற்றவாளிகள் கொலைகாரர்கள் என்பதையும், அவர்கள் நிரபராதிகள் அல்ல என்பதையும் நாங்கள் அழுத்தமாகக் கூற விரும்புகிறோம். இதனை வெளிப்படுத்தும் வகையில் நம்முடைய மன உணர்வை வெளிப்படுத்தும் வகையில் வெள்ளைத் துணியால் வாயை கட்டிக் கொண்டு ‘வன்முறையை எதிர்ப்போம், என்று தெரிவித்திருந்தார்.
இதன்படி இன்றைய தினம் தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் காங்கிரஸ் கட்சியினர் அறப்போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னையில் காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் அறப்போராட்டம் நடைபெற்றது. அப்போது செய்தியாளர்கிளிடம் பேசிய அழகிரி, “பேரறிவாளன் குற்றவாளி இல்லை என்றோ, கொலை குற்றத்திற்கும் தொடர்பு இல்லை என்றோ உச்ச நீதிமன்றம் கூறவில்லை. ஆளுநர் காலம் தாழ்த்தினார் என்ற ஒரு வார்த்தையை வைத்துக் கொண்டு, நீதி பரிபாலனம் வழியாக ஏற்பட்ட தவறைக் காரணம் காட்டி விடுதலை செய்துள்ளார்கள்.
உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை நாங்கள் விமர்சிக்க விரும்பவில்லை. ஆனால், குற்றவாளியை எப்படி நடத்த வேண்டும் என்ற நடைமுறை தேசத்தில் உள்ளது. அதை தகர்த்து எறியும் வகையில் இந்தத் தீர்ப்பு அமைந்துள்ளது என்று நாங்கள் வருந்துகிறோம். ராஜீவ் காந்தியுடன் சேர்ந்து 17 பேர் கொலை செய்யப்பட்டார்கள். அவர்களின் குடும்பத்திற்கு பதில் என்ன?
அற்புதம் அம்மாளின் மனநிலையை நான் அறிவேன். ஒரு தாய் எவ்வாறு சிந்திப்பரோ, அப்படி தான் அவர் சிந்தித்து உள்ளார். ராஜீவ் காந்திக்கும் தாய் உள்ளார். கொலை செய்யப்பட்ட 17 பேருக்கும் தாய் உள்ளனர். அவர்களுடைய மன நிலையை யார் அறிந்து கொண்டார்கள். என்ன மன நிலை இது. ஒரு கொலைகாரருக்கு இந்த அளவு பணிந்து பேசுதை இந்த சமூகம் ஏற்றுக் கொள்ளுமா? நாகரிகமான தமிழ்ச் சமூகம் இதை ஏற்றுக் கொள்ளுமா? இது நியாமற்ற செயல்” என்று தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *