

மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி தொகுதி மறு சீரமைப்பு என்பது நம் மீது தொங்கி கொண்டிருக்கும் கத்திக்கு சமம் எனவும் அது நம்முடைய மாநில உரிமைகளை பறிப்பதற்கும் மாநிலத்தின் நலன்களை பறிப்பதற்கும் பாஜக அரசு தரும் தாக்குதல் எனவும் தெரிவித்தார். மேலும் இந்த விவகாரத்தில் அனைத்து மாநிலங்களையும் தமிழக முதல்வர் ஒருங்கிணைத்து நடத்திய கூட்டத்தில் குறிப்பாக நாடாளுமன்றத்தில் தற்பொழுது என்ன நிலைமை உள்ளதோ அதுவே தொடர வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

1971 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி பார்த்தால் தமிழ்நாடு, ஒடிசா, கர்நாடகா, கேரளா, தெலுங்கானா, பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் மக்கள் தொகை 23.41%, வடமாநிலங்களில் உத்திர பிரதேசம் பீகார் மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் 24.39% மக்கள் தொகை இருந்ததாகவும், தேசிய அளவில் மக்கள் தொகையை கட்டுப்படுத்துகின்ற திட்டங்களை தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா போன்ற மாநிலங்கள் சிறப்பாக செயல்படுத்தியது எனவும் வட மாநிலங்கள் அதனை செயல்படுத்தவில்லை எனவும் விமர்சித்தார். வடமாநிலங்கள் அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலங்களாக உள்ளது என தெரிவித்த அவர் தற்பொழுது அது பிரிக்கப்படும் பட்சத்தில் தென் மாநிலங்கள் பெரிதும் பாதிக்கப்படும் என தெரிவித்தார்.
பொருளாதார வளர்ச்சியில் GDSP 36% பங்களிப்பை தமிழ்நாடு கேரளா ஆகிய மாநிலங்கள் அளிப்பதாகவும் வட மாநிலங்கள் 20% தான் அளிப்பதாகவும் தெரிவித்தார்.

மக்களவைத் தொகுதி மறுசீரமைப்பு குறித்து பேசுவதற்கு நாடாளுமன்றத்தில் திமுக எம்பிக்களை பேசுவதற்கு விடாமல் தடை செய்து உள்ளதாகவும் அது குறித்தான தெளிவான முடிவை பிரதமர் மோடியோ அல்லது அமித்ஷா கூறவில்லை எனவும் தெரிவித்தார். மேலும் நம்முடைய உரிமைகளை பறிக்கின்ற பல்வேறு செயல்களை மறைமுகமாக செய்து வருவதாகவும் குற்றம் சாட்டினார்.
மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கை குறைவாக இருந்தது தான் மணிப்பூர் கலவரத்திற்கு காரணமானது என தெரிவித்தார். எனவே தமிழ்நாடு உள்ளிட்ட மற்ற மாநிலங்கள் பாதிக்காமல் இருப்பதற்கு நியாயமான முறையில் பாஜக அரசு 1971 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கையை அமைக்க வேண்டும். இல்லையென்றால் தொடர்ந்து 25 ஆண்டுகளுக்கு மக்கள் தொகையை இன்றைக்கு இருக்கக்கூடிய மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கையை நீடிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

