பொதுத் தேர்வு எழுத இருக்கும் மாணவர்கள் பயமில்லாமல் தைரியமாக தேர்வை எதிர்கொள்ள ஊக்கப்படுத்தும் வகையில் தேர்வுக்குத் தயாராகுங்கள் என்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி இன்று பங்கேற்கிறார்.
இதற்காக தேர்வு செய்யப்பட்டுள்ள மாணவர்களுடன் பிரதமர் விவாதிக்கும் நிகழ்ச்சி உலகம் முழுவதும் நேரடியாக ஒலிபரப்பப்படுகிறது. மாணவர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடும் நிகழ்ச்சி குறித்து புதுச்சேரியில் உள்ள ஆளுநர் மாளிகையில் துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் தெரிவித்துள்ளதாவது: கொரோனா கால கட்டங்களில் பள்ளிகள் மூடப்பட்டதால் மாணவர்கள் மன ரீதியாக பாதிக்கப்பட்டனர். இந்த நிலையில் மாணவர்கள்பயமோ,தயக்கமோ, தடுமாற்றமோ இல்லாமல் தேர்வு எழுத பிரதமரே முன்வந்து ஊக்கமளிப்பது மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.
மாணவர்கள், பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் தேர்வுக்குத் தயாராகுங்கள் நிகழ்ச்சியில் அதிக அளவில் கலந்து கொள்ள வேண்டும். இன்று பிரதமர் மாணவர்களுடன் கலந்துரையாடும் நிகழ்ச்சியை புதுச்சேரி ஆளுநர் மாளிகையில் 50 மாணவர்கள் திரையில் பார்ப்பார்கள். இவர்களுக்கு பிரதமர் எழுதிய நூலின் தமிழாக்கப் பிரதிகள் வழங்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.