• Thu. Apr 25th, 2024

கர்நாடகாவில் போலீஸ் ஜீப்பையே ஆட்டைய போட்ட நபர்

கர்நாடகாவில் போலீஸ் ஜீப்பை கடத்தி சென்ற லாரி டிரைவர் கைது செய்யப்பட்டார். இதற்கு அவர் கூறிய காரணத்தை கேட்டு போலீசாருக்கு தலையே சுற்றி விட்டது.
இந்த சம்பவத்தை பற்றிதான் பார்க்க போகிறோம்.

கர்நாடகாவின் தார்வாட் மாவட்டம் அன்னிகேரி என்ற பகுதியில் காவல் நிலையம் உள்ளது. கடந்த புதன்கிழமை இரவு இந்த காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக இருக்கும் எல்.கே. ஜூலகட்டி பணி முடிந்து வீட்டுக்கு திரும்புவதற்கு தயாரானார்.

அப்போது காவல் நிலைய வளாகத்தில் இரண்டு போலீஸ்காரர்கள் தூங்கியபடி இருந்தனர். அங்கு நின்று கொண்டிருந்த போலீஸ் ஜீப்பை காணவில்லை. மர்ம நபர் யாரோ போலீஸ் ஜீப்பை திருடிச் சென்றது தெரியவந்தது.

இதனை தொடர்ந்து ஜீப்பை போலீசார் தேட ஆரம்பித்த்தனர். இந்த நிலையில் பையடாகி நகருக்கு அருகில் உள்ள மோட்பென்னூர் என்ற பகுதியில் போலீஸ் ஜீப் ஒன்று தனியாக இருப்பது கண்டு அப்பகுதி மக்கள் சந்தேகம் அடைந்தனர். அங்கு சென்று பார்த்தபோது போலீகாரர்கள் யாரும் இல்லை.

ஒரு நபர் மட்டும் ஜீப்பின் உள்ளே தூங்கி கொண்டிருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இது பற்றி உள்ளூர் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் அவர்கள் விரைந்து வந்து போலீஸ் ஜீப்பை மீட்டனர்.

அந்த நபரையும் கைது செய்தனர். பின்னர் அந்த நபரையும், ஜீப்பையும் அன்னிகேரி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். விசாரணையில் போலீஸ் ஜீப்பை கடத்தி சென்றது அன்னிகேரி டவுனில் வசிக்கும் நாகப்பா ஒய்.ஹடபட் (45) என்பது தெரியவந்தது.

ஜீப்பை கடத்தி சென்றது ஏன்? என்பது பற்றி நாகப்பா ஒய்.ஹடபட்டிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள். அப்போது அவர் கூறியதை கேட்டு போலீசாருக்கு தலையே சுற்றி விட்டது.

அதன் விவரம் பின்வருமாறு:- நாகப்பா லாரி டிரைவராக இருந்து வருகிறார். அவருக்கு போலீஸ் ஜீப் ஓட்ட வேண்டும் என்ற ஆசை பல ஆண்டுகளாக இருந்துள்ளது. லாரி டிரைவராக மாநிலத்தின் அனைத்து பகுதிகளுக்கும், அண்டை மாநிலங்களுக்கும் பயணம் செய்துள்ளார் அவர்.

ஆனால் போலீஸ் ஜீப்பில் நீண்ட சவாரி செல்ல வேண்டும் என்ற அவரது கனவு நீண்ட காலம் நிறைவேறாமல் இருந்து வந்துள்ளது. அன்னிகேரி காவல் நிலைய வளாகத்தில் நிற்கும் போலீஸ் ஜீப்பை பார்க்கும் போதெல்லாம் அதனை ஓட்டி பார்க்க வேண்டும் என்ற ஆசை நாகப்பாவின் மனதில் எழுந்து விடும்.

ஆனால் அதனை ஓட்டி பார்க்க முடியததால் ஆசையை அடக்கிவிட்டு சென்று விடுவார். கடந்த புதன்கிழமை இரவு அவர் அன்னிகேரி காவல் நிலையத்துக்கு சென்று பார்த்தார். அப்போது போலீஸ் ஜீப் அங்கு நின்று கொண்டிருந்தது.

ஜீப் லாக் செய்யப்படாமல் இருந்தது. அத்துடன் ஜீப்பின் சாவியும் அதில் இருந்தது. இதுபோக இரண்டு போலீஸ்காரர்கள் தூங்கி கொண்டிருப்பதை பார்த்தார். ‘கண்ணா 3 லட்டு திங்க ஆசையா’ என்று அவரது மனம் வேகமாய் கூறியது.

”இதை விட்டால் வேறு வாய்ப்பு கிடைக்காது” என்று கருதிய நாகப்பா, நைசாக போலீஸ் ஜீப்பை அங்கு இருந்து ஓட்டிச்சென்றார். கர்நாடக மாநிலத்தின் பல இடங்களில் போலீஸ் ஜீப்பை ஓட்டிச் சென்று, தனது நீண்ட நாள் கனவை ஆசை தீர அனுபவித்தார் நாகப்பா.

புறப்பட்ட இடத்தில் இருந்து மோட்பென்னூர் வரை சுமார் 112 கி.மீ வரை சென்ற அவர் துக்கம் வந்ததால், ஜீப்பை நிறுத்தி விட்டு துங்கியுள்ளார். அப்போதுதான் பொதுமக்கள் இதனை பார்த்து போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

பின்னர் போலீசாரிடம் மாட்டியுள்ளார். நாகப்பா கூறியதை கேட்டு போலீசுக்கு அழுவதா? சிரிப்பதா? என்று தெரியவில்லை. பல மணி நேரம் பரிதவிப்புடன் அலைய விட்ட நாகப்பாவை, போலீசார் கடும் கோபத்துடன் தங்கள் பாணியில் மிக சிறப்பாக கவனித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *