தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை தேர்வு செய்யப்பட்ட நாளில் இருந்தே, அடுத்த சட்டமன்ற தேர்தலை குறிவைத்து காய் நகர்த்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. உள்ளாட்சி தேர்தலை எதிர்கொள்ள பாஜக தயாராகி வருவதாகவும், தேர்தல் பணி குழுக்கள் இப்போது அமைக்கப்பட்டுள்ளதாகவும் அண்ணாமலை ஏற்கனவே பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார்.
தமிழிசை முயற்சியால் தமிழகத்தில் தாமரையை மலர வைக்க முடியவில்லை. ஆனால் எல்.முருகன் முயற்சியால் 4 தொகுதிகளில் தாமரை மலர்ந்து சட்டமன்றம் வரை படர்ந்துவிட்டது. எனவே எதிர்வரும் 2026 தமிழக சட்டமன்ற தேர்தலில் 150 தொகுதிகளில் தாமரையை மலர செய்வதுதான் நமது அல்டிமேட் ஏய்மாக இருக்க வேண்டும் என அண்ணாமலை கட்சி தொண்டர்களை உற்சாகப்படுத்தி வருகிறார்.
இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக மூத்த தலைவரும், மணிப்பூர் ஆளுநருமான இல.கணேசன் அண்ணாமலை தலைமையில் பாரதிய ஜனதா கட்சி தமிழகத்தில் ஆட்சியமைக்கும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் கிடையாது அடித்துக்கூறியுள்ளார். இது பாஜக தொண்டர்களை இன்னும் உற்சாகம் அடைய வைத்துள்ளது.