• Sun. Jun 15th, 2025
[smartslider3 slider="7"]

அரை நூற்றாண்டுக்குப் பின் பிடிபட்ட கொலைகாரன்..,

விரல் நுனியில் இறைவன் பதித்த ‘க்யூஆர் கோட்’ எனப்படும் கைரேகை, அரை நூற்றாண்டுக்குப் பிறகு ஒரு கொலைக் குற்றவாளியைப் பிடிக்க உதவி உள்ளது. 1977 ஆம் ஆண்டு கலிபோர்னியாவில் ஜானெட் ரால்சன் என்ற இளம் பெண்ணைக் கொலை செய்த வழக்கில், வில்லி யூஜி சிம்ஸ் (69) என்பவர்இப்போது பிடிபட்டார். 21 வயது இளைஞனாக இருந்தபோது வில்லி செய்த கொலைக்கு, 48 ஆண்டுகளுக்கு பின்பு கைது செய்யப்பட்டுள்ளார்.

ஜானெட் கொலை செய்யப்பட்ட காரில் இருந்து கண்டெடுக்கப்பட்ட சிகரெட் பாக்கெட்டில் இருந்த கைரேகையே கொலையாளியை பிடிக்க முக்கிய ஆதாரமாக அமைந்தது. ஃபெடரல் இன்வெஸ்டிகேஷன் பீரோவின் நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி கைரேகையை ஆய்வு செய்தபோதுதான் வில்லிதான் குற்றவாளி என்று தெரியவந்தது. “புகைபிடித்தல் உடல்நலத்திற்கு தீங்கு விளைவிக்கும்” என்பதற்கு இதைவிட பெரிய விளம்பரம் தேவை இல்லை!

1977 ல் கலிபோர்னியாவில் உள்ள ஒரு பாருக்கு அருகிலுள்ள அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தின் வாகன நிறுத்துமிடத்தில் காரின் பின் சீட்டில், முழு கை சட்டையால் கழுத்தை நெரித்துக் கொலை செய்யப்பட்ட நிலையில் ஜானெட்டின் உடல் கண்டெடுக்கப்பட்டது. பாலியல் வன்கொடுமைக்கான தடயங்களும் கிடைத்தன. கொலை செய்யப்படுவதற்கு முந்தைய இரவு ஜானெட் ஒரு அடையாளம் தெரியாத நபருடன் பாரில் இருந்து வெளியே சென்றதை நண்பர்கள் தெரிவித்தனர்.

போலீசார் விசாரணை நடத்தப்பட்டாலும், பின்னர் அது நிறுத்தப்பட்டது. அதே ஆண்டில் இராணுவ நிலையத்தில் ஒரு இராணுவ வீரராக பணியில் சேர்ந்த வில்லி சிம்ஸ், அடுத்த ஆண்டு மற்றொரு கொலை முயற்சி வழக்கில் நான்கு ஆண்டுகள் சிறையில் இருந்தார்.
நவீன தொழில்நுட்பத்தின் மூலம் பல்வேறு வழக்குகளில் உள்ள லட்சக்கணக்கான கைரேகைகளை ஒப்பிட்டுப் பார்த்தபோதுதான் விசாரணை வில்லியை நோக்கி திரும்பியது. ஜானெட்டின் நகங்களுக்கு இடையில் இருந்து எடுக்கப்பட்ட டிஎன்ஏ மாதிரியும் வில்லியின் டிஎன்ஏவும் ஒத்துப்போனதால் அவர் கைது செய்யப்பட்டார்.
குற்றவாளியைப் பிடித்ததற்கு நன்றி, தாமதமானாலும் நீதி நிலைநாட்டப்பட்டது என்று ஜானெட் கொலை செய்யப்பட்டபோது 6 வயதாக இருந்த அவரது மகன் ஆலன் (54) கூறினார்.