

காங்கோவில் கோரதாண்டவம் ஆடிய மழையால் ஏற்பட்ட கடும் வெள்ளப்பெருக்கில் சிக்கி 100 பேர் பலியானதாக மாகாண அரசு உறுதிப்படுத்தியுள்ளது.
ஆப்பிரிக்க நாடான காங்கோ ஜனநாயக குடியரசில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. அதன்படி கிழக்கு மாகாணமான கிவுவில் வியாழக்கிழமை இரவு முதல் வெள்ளிக்கிழமை வரை மழை வெளுத்து வாங்கியது. இதன் காரணமாக நங்கன்ஜா நகரில் உள்ள டாங்கன்யிகா உள்பட பல ஏரிகள் நிரம்பின. தொடர்ந்து பெய்த கனமழையால் அந்த ஏரியின் கரை உடைந்து தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் ஏரிக்கரையோரம் அமைந்துள்ள கசாபா கிராமத்தை வெள்ளம் அடித்துச் சென்றது. இதில் அங்கிருந்த 100க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து தரைமட்டமாகின.
இந்த கட்டிட இடிபாடு மற்றும் வெள்ளப்பெருக்கில் சிக்கி பலர் அடித்துச் செல்லப்பட்டனர். இதனையடுத்து மீட்பு பணி துரிதப்படுத்தப்பட்டது. எனினும் இதுவரை நடைபெற்ற மீட்பு பணியில் 100 பேர் சடலமாக மீட்கப்பட்டு உள்ளனர். மேலும் 50 பேர் மாயமானதாக கூறப்படுகிறது. எனவே அவர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்ற வருகிறது.

