• Fri. Apr 26th, 2024

மாடக்குளம் கிராமத்தில் வெகு விமர்சியாக நடைபெற்ற புரவிஎடுப்பு விழா…

Byகுமார்

Oct 19, 2021

மதுரை மாவட்டம் மாடக்குளம் கிராமத்தில் கடந்த 9 நாட்களாக உலக நன்மை வேண்டி, நாடு செழிக்க மழை வேண்டி திருவிழா நடைபெற்றது. இந்த திருவிழாவின் கடைசி நாளான நேற்று நள்ளிரவில் ஊர் மக்கள் அனைவரும் ஒன்றுகூடி மழை வேண்டி புறவி எடுக்கும் விழாவில் கலந்து கொண்டனர்.

முன்னதாக ஸ்ரீகபாலீஸ்வரி அம்மன் ஆலயத்தில் அம்மனுக்கு சிறப்பு விசேஷ பூஜைகள் நடைபெற்றன. அதனை தொடர்ந்து ஊர்மரியாதைகாரர் வீட்டில் வைக்கப்பட்டிருந்த காவல் தெய்வமான அய்யனார் சிலை சீர்பாதமாக பக்தர்களால் தூக்கிவரப்பட்டது. அதனை தொடர்ந்து பக்தர்கள் வேண்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த குதிரைகள் ஜல்லிக்கட்டு காளைகள் போன்ற 11 சிலைகள் இளைஞர்களால் தூக்கி வரப்பட்டு பின்னர், மாடக்குளம் மந்தையிலே சிலைகளுக்கு பாரம்பரிய முறைப்படி கண் திறக்கப்பட்டது. பிறகு மரியாதைகாரர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் முன்னிலையில் விசேஷ பூஜைகள் நடைபெற்றன.

பூஜைகளுக்குப் பிறகு அய்யனார் சிலை மற்றும் இதர சிலைகளும் இளைஞர்களால் உற்சாகமாக ஊர்வலமாக மாடக்குளம் கண்மாயில் வீற்றிருக்கும் அய்யனார் கோவிலுக்கு எடுத்துச்செல்லப்பட்டது. இந்த விழாவில் ஊர் பொதுமக்கள் சார்பாக 201 பொங்கல் பானைகளை பெண்கள் தலையில் சுமந்து வரிசையாக கோவிலை நோக்கி சென்றனர் .

நள்ளிரவு 12 மணிக்கு மேல் நடைபெற்ற சிறப்பு பூஜைக்கு பிறகு அய்யனார் கோவில் வளாகத்தில் பொங்கல் வைக்கப்பட்டு சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பக்தர்கள் தங்கள் வேண்டுதலை நிறைவேற்றிய சுவாமிக்கு முடிக்காணிக்கை வழங்கினர்.

இவ்வாறு வழிபடுவதால் மழை பெய்து மதுரையில் உள்ள மிகப்பெரிய கண்மாய்களில் ஒன்றான மாடக்குளம் கண்மாய் பெருகி, செல்வம் பெருகும் வகையில் விவசாயம் செழிக்கும் என்பது ஐதீகம். ஆண்டாண்டு காலமாக நடைபெறக்கூடிய இந்த விழாவில், பணி நிமித்தமாக வேறுவேறு மாவட்டங்கள் வெளிநாடுகளுக்கு சென்றாலும் சொந்த ஊருக்கு இந்த திருவிழாவின் போது அனைவரும் ஒன்று கூடுவது மேலும் சிறப்பு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *