• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

சென்னையின் புதிய மேயராக தேர்வான பிரியாவுக்கு, செங்கோல் வழங்கிய அமைச்சர்கள்!!

சென்னையின் புதிய மேயராக தேர்வான பிரியாவுக்கு, அமைச்சர்கள் செங்கோல் வழங்கி சிறப்பித்தனர்.

சென்னை மாநகராட்சியின் மேயர் பதவிக்கு பிரியா ராஜன் போட்டியின்றி இன்று தேர்வு செய்யப்பட்டுள்ளார் . 28வயதான இவர் சென்னை பல்கலைக்கழகத்தில் எம்.காம் பட்டப்படிப்பு முடித்துள்ளார். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்ட பிரியா, தன்னை எதிர்த்து போட்டியிட்ட வேட்பாளரை காட்டிலும் 6299 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அமைச்சர் சேகர்பாபுவின் பரிந்துரையின் பெயரில் தான் சென்னை மேயர் ஆகும் வாய்ப்பு இவருக்கு கிடைத்துள்ளது. சென்னை மேயர் பதவி இந்த முறை பட்டியலின பெண்களுக்காக ஒதுக்கப்பட்ட நிலையில் பிரியா ராஜன் சென்னையில் மூன்றாவது பெண் மேயராக பதவி ஏற்கிறார். அதே சமயம் வட சென்னையில் இருந்து தேர்ந்தெடுக்கப்படும் முதல் பெண் மேயர் என்ற பெருமை பெருமையை இவர் பெற்றுள்ளார்.

சென்னை மாநகராட்சி மேயர் பதவிக்கு திமுகவின் பிரியா மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்த நிலையில் அவர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி அறிவித்த நிலையில் சென்னை மாநகராட்சியின் 49வது மேயராக பிரியா ராஜன் பொறுப்பேற்றார்.

இந்நிலையில் சிவப்பு நிற அங்கி அணிந்து மேயர் இருக்கையில் அமர்ந்தார் பிரியா. அமைச்சர்கள் சேகர் பாபு, மா.சுப்பிரமணியன் மற்றும் மயிலை எம்எல்ஏ த.வேலு ஆகியோர் இணைந்து பிரியா ராஜனுக்கு செங்கோல் வழங்கினர். முன்னதாக சென்னை மாநகராட்சி மேயர் பதவிக்கு திமுக சார்பாக போட்டியிடும் பிரியா மனு தாக்கல் செய்ய ரிப்பன் மாளிகைக்கு காலையில் வருகை புரிந்தார். அவருடன் அமைச்சர்கள் சேகர்பாபு, ம. சுப்பிரமணியன் மற்றும் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் வருகை புரிந்தனர். அத்துடன் பிரியா பதவியேற்பில் இவர்கள் கலந்து கொண்டதும் குறிப்பிடத்தக்கது.