• Fri. Apr 26th, 2024

மிரட்டியபாஜக கருஞ்சட்டையினர் களமிறங்கியதால் பின்வாங்கியது – கொடுமுடி பரபரப்பு

ஈரோடு மாவட்டம் கொடுமுடி மகுடேசுவரர் கோயிலில் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடியதாக செயல் அலுவலர் உள்பட சிலர் மீது பாஜகவினர் புகார் அளித்தனர்.

இந்நிலையில் செயல்அலுவலர் ரமேஷ், மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் பாஜகவைச் சேர்ந்த சரஸ்வதி உள்பட சிலர் மீது புகார் தெரிவித்து கொடுமுடி காவல் நிலையத்தில் புகார் மனு அளித்தார்.

இதற்கு எதிர்வினையாக பாஜக மாநில விவசாய அணி தலைவர் நாகராஜ், ஆகம விதிகளுக்கு எதிராகச் செயல்பட்ட செயல்அலுவலர் ரமேஷ் மீது நடவடிக்கை எடுக்கவேண்டி வரும் 26 ஆம் தேதி உண்ணாவிரதம் போராட்டம் நடைபெறும் எனவும், அதற்குபிறகும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் முற்றுகைப் போராட்டம் நடைபெறும் எனக் கூறியிருந்தார்.

இந்நிலையில்,கோயில் அலுவலரை பாஜகவினர் மிரட்டுவதாகக் கூறி அவருக்கு ஆதரவாக திராவிடர் விடுதலைக் கழகம் களமிறங்கியது.

இதுதொடர்பாக அவ்வமைப்பு வெளியிட்டிருந்த செய்திக்குறிப்பில்….

ஈரோடு மாவட்டம் கொடுமுடி மகுடேசுவரர் கோவில் ஊழியர்கள் மீதும், அலுவலகர்களின் மீதும் தொடர்ச்சியாகப் போலியான புகார்களைத் தந்தும் பொய்யான குற்றாச்சாட்டுகளை அவர்கள்மேல் சுமத்தியும்
ஓர் இழிவான அரசியலைத் தொடர்ச்சியாக செய்து வருகிறது பாஜக /இந்து மக்கள் கட்சி /இந்து முன்னனி மற்றும் அதன் துணை அமைப்புகள்.

இவர்களின் இந்த இழிவான அரசியலின் தொடர் நிகழ்வாக, நாளை கொடுமுடி மகுடேசுவரர் கோவில் நிர்வாகத்தைக் கண்டித்து உண்ணாவிரதம் இருக்கப் போவதாக பாஜக கூடாரம் அறிவித்திருக்கிறது.

போலியான குற்றச்சாட்டுகளின் மூலம் கோவில் பணியாளர்களுக்கும், அறநிலையத்துறைக்கும், அப்பகுதியில் வசிக்கிற மக்களுக்கும், வழிபாட்டுக்கு வந்து செல்கிற பயணிகளுக்கும் அநாவசியமான தொந்தரவுகளையும், இன்னல்களையும் ஏற்படுத்தும் முகமாக இந்த உண்ணாவிரதப் போராட்டத்தை பாஜக கூடாரச் சங்கிகள் அறிவித்திருக்கின்றனர்.

இவர்களின் இந்த தொடர்ச்சியான பொய் பிரச்சாரங்களை முறியடிப்பதும்,

கோவில் பணியாளர்களும் அப்பகுதியைச் சார்ந்த மக்களும் ஓர் சுமூகமானச் சூழலுக்குள் வாழ்வதை தொடரச் செய்வதும் பெரியார் தொண்டர்களின் கடமையாகும்.

எனவே,பாஜக கூடாரத்தின் உண்ணாவிரத நாடகத்தை முறியடிக்கும் விதமாக திராவிடர் விடுதலைக் கழகம் ஈரோடு தெற்கு மாவட்டத்தின் தலைமையிலும் முற்போக்குக் கட்சிகள் – அமைப்புகளின் ஆதரவோடும்
26 -12- 2021 ஞாயிறு காலை பத்து மணியளவில் கொடுமுடியில் உண்ணும்விரதம் போராட்டம் நடைபெற உள்ளது.

தோழமை அமைப்புகளின் தோழர்களும், முற்போக்குக் கட்சியை சேர்ந்த தொண்டர்களும் திரளாக கலந்துகொண்டு

பாஜக கூடாரத்தின் பொய் பரப்புரையை மிரட்டல்களை முறியடித்திடவும்,
தமிழ்நாடு என்றென்றும் மத துவேசத்தை ஆதரிக்காத…சகோதர மனப்பான்மை கொண்ட பெரியார் மண் என்பதை காவிகளுக்கு மீண்டும் காத்திரமாக உணர்த்திடவும் இப்போராட்டத்திற்கு அனைவரும் கரம் கோர்க்குமாறு தோழமையுடன் வேண்டுகிறோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

பாஜகவின் போராட்டத்துக்கு திராவிடர் விடுதலைக் கழகம் எதிர்போராட்டம் அறிவித்தவுடன் பாஜகவினர் பின்வாங்கிவிட்டனர்.

அவர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தை இரத்து செய்தனர்.

அதனால், திராவிடர் விடுதலைக் கழகத்தினர் தனியார் இடத்தில் போராட்டத்தை முடித்துக் கொண்டனர்.

இதனால் கொடுமுடி மகுடேசுவரர் கோயில் வட்டாரத்தில் இன்று பெரும் பரபரப்பு நிலவியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *