• Fri. Jan 23rd, 2026
WhatsAppImage2026-01-22at2244171
previous arrow
next arrow
Read Now

புல்வாமா தாக்குதலில் கோட்டை விட்ட உளவுத்துறை..,சரமாரியாக கேள்விகளை எழுப்பும் காங்கிரஸ்..!

Byவிஷா

Feb 14, 2023

புல்வாமா தாக்குதலில் 40 ஜவான்கள் உயிரிழந்ததன் பின்னணியில் உளவுத்துறை கோட்டை விட்டுள்ளதாக காங்கிரஸ் கட்சி சரமாரியாக கேள்விகளை எழுப்பியுள்ளது.
புல்வாமா தாக்குதலின் நான்காம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. 2019ஆம் ஆண்டு பிப்ரவரி 14ஆம் தேதி ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் ஜம்மு – ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் சி.ஆர்.பி.எஃப் எனப்படும் மத்திய ரிசர்வ் போலீஸ் படையினரை ஏற்றிக் கொண்டு வாகனங்கள் சென்று கொண்டிருந்தன. அப்போது வெடிகுண்டு நிரப்பப்பட்ட காரை மோதச் செய்து பயங்கரவாதிகள் தற்கொலைப் படை தாக்குதல் நடத்தினர். இதில் பாதுகாப்பு படையை சேர்ந்த 40 பேர் வீரமரணம் அடைந்தனர். இது இந்திய வரலாற்றில் மிகப்பெரிய சோக வரலாறாக மாறியது. இந்த தாக்குதலின் பின்னணியில் ஜெய்ஷ்-இ-முகமது என்ற பயங்கரவாத அமைப்பு இருப்பதாக தெரியவந்தது. புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாகிஸ்தான் நாட்டின் பாலக்கோட்டில் உள்ள ராணுவ முகாம்கள் மீது இந்திய விமானப்படை அதிரடி தாக்குதல் நடத்தியது.
அதன்பிறகு ஜம்மு காஷ்மீரில் பல்வேறு அரசியல் மாற்றங்கள் நிகழ்ந்தன. குறிப்பாக ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் 350வது சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்டு ஜம்மு காஷ்மீர், லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டன. இந்த சூழலில் புல்வாமா தாக்குதல் நடைபெற்று நான்கு ஆண்டுகளை கடந்து விட்டது. இன்னும் அந்த கனத்த சோகம் இந்தியர்கள் நெஞ்சில் இருந்து நீங்கவில்லை. நான்காம் ஆண்டு நினைவு தினத்தை ஒட்டி வீர மரணம் அடைந்த வீரர்களுக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர். இதுபற்றி தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, புல்வாமா தாக்குதலில் இழந்த வீரர்களை நினைவு கூர்வோம். அவர்களின் உயிர் தியாகத்தை ஒருபோதும் மறக்க மாட்டோம். இந்த நிகழ்வு வலுவான இந்தியாவை உருவாக்க நம்மை ஊக்குவிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் மத்திய பிரதேச மாநில முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான திக் விஜய் சிங் தனது ட்விட்டரில், 40 சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் வீரமரணம் அடைந்ததற்கு இன்று நாம் அஞ்சலி செலுத்தி கொண்டிருக்கிறோம். இந்த தாக்குதல் முழுக்க முழுக்க உளவுத்துறையின் தோல்வியால் நிகழ்ந்தது. இதனால் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் மீண்டும் வந்திருப்பார்கள் என நம்புவதாக பதிவிட்டுள்ளார்.
ஜம்முவில் கடந்த ஜனவரி 23ஆம் தேதி பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய திக் விஜய் சிங், புல்வாமா சம்பவத்தில் எப்படி மிகப்பெரிய பாதுகாப்பு குறைபாடு நடந்தது? இந்த விஷயத்தில் மத்திய அரசு மிகவும் கவனமாக செயல்பட்டிருக்க வேண்டாமா? இதுநாள் வரை புல்வாமா தாக்குதல் சம்பவம் பற்றிய அறிக்கையை பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் சமர்பித்தாரா? ஏன் செய்யவில்லை என சரமாரியாக கேள்வி எழுப்பியது குறிப்பிடத்தக்கது.