• Sun. Sep 8th, 2024

வார்த்தைகளின் மகிமை

Byவிஷா

Dec 10, 2021

ஒருவரிடம் குதிரை ஒன்று இருந்தது. எழில் என்று அதற்குப் பெயரும் வைத்திருந்தார் அவர். அவருடைய நிலத்து வேலைகளுக்கு பெரிதும் உதவுவது எழிலே தான். ஒரு மாலை நேரத்தில், தன் வீட்டு வாசலில் உட்கார்ந்திருந்தார் அந்த விவசாயி.


அவரைத் தேடிக் கொண்டு ஒருவர் வந்தார். வெகு தூரத்திலிருந்து வருகிறார் என்பதை அவருடைய கலைந்த தலையும், கசங்கிய ஆடைகளுமே உணர்த்தின. வந்தவர், வணக்கம் சொன்னார். விவசாயி, அவர் அமர்வதற்கு ஒரு நாற்காலியைக் கொண்டு வந்து போட்டார். அவர் உட்கார்ந்ததும்,சூடாக டீ குடிக்கிறீங்களா ? என்று கேட்டார்.


வந்தவர், அவசரமாக ‘வேண்டாம்’ என்று சொன்னார்.சொல்லுங்க, என்ன விஷயம்?’ விவசாயி கேட்டார். ஒண்ணுமில்லை, நான் கோபி முல்லங்கரையிலிருந்து வர்றேன். இது எனக்குப் பழக்கமில்லாத பாதை. வழியில கன்ட்ரோல் பண்ண முடியாம, நான் வந்த கார் ஒரு பள்ளத்துல இறங்கிடுச்சு. அதை வெளியே எடுக்கணும். உங்ககிட்ட ஒரு குதிரை இருக்குன்னு சொன்னாங்க. அதைக் கொண்டு காரை வெளியே எடுத்துடலாம் என்றும் சொன்னாங்க. அதான் உங்ககிட்ட உதவி கேட்கலாம் என்று…ரொம்பப் பெரிய காரா ?’ என்று கேட்டார் விவசாயி. இல்லை, இல்லை. சின்ன கார் தான்’ என்றார் வந்தவர்.


விவசாயி கயிறு உட்பட சில உபகரணங்களை எடுத்துக் கொண்டார். குதிரையின் கட்டை அவிழ்த்து, அதையும் நடத்திய படியே அவருடன் சென்றார். விவசாயி, கார் விழுந்திருக்கும் பள்ளம், அதன் நிலை எல்லாவற்றையும் பொறுமையாகப் பார்த்தார். கார் சிறியதாகத் தான் இருந்தது. ஆனால், காரை வெளியே எடுக்கும் முயற்சியில், ஒரு வேளை அவருடைய குதிரைக்குக் காயம் ஏற்படலாம் என்றும் அவருக்குத் தோன்றியது.


விவசாயி ஒரு கயிற்றை எடுத்து காரில் கட்டி, குதிரையோடு இழுப்பதற்குத் தோதாகவேப் பிணைத்தார். கொஞ்ச நேரம் எதுவும் செய்யாமல் அப்படியே நின்று கொண்டிருந்தார்.பிறகு, எங்கடா பழனி..இழு பார்ப்போம் ! என்று சத்தமாகவேக் குரல் கொடுத்தார். குதிரை அசையாமல் அப்படியே நின்றிருந்தது. ஏண்டா கந்தா இழுடா ராஜா ! இன்னும் சத்தமாகவேச் சொன்னார் விவசாயி. குதிரை துளிகூட நகரவே இல்லை.

டேய் முருகா… வேகமா இழு ! மறுபடியும் உரத்த குரலில் சொன்னார். மீண்டும் குதிரை ஒரு இஞ்ச் கூட நகரவேயில்லை.


என் செல்லம்.. என் தங்கம்… எழிலூ.. நீயும் சேர்ந்தே இழுடா ! என்றார். அவ்வளவு தான் குதிரை கயிற்றை இழுக்க ஆரம்பித்தது. அடுத்த ஐந்தாவது நிமிடமே,கார், பள்ளத்திலிருந்து மேலே ஏறிவிட்டது. வெளியூர்க்காரரோ, விவசாயிக்கு நன்றி சொன்னார். ஐயா, நீங்க ஏன் உங்க குதிரையை விதவிதமான பேரால கூப்பிட்டீங்க ? அது தான் எனக்கு ஒண்ணுமே புரியலை. ஐயா, என் எழிலுக்கு ரெண்டு கண்ணுமே தெரியாது. தான் மட்டும் தான் இந்த கஷ்டமான வேலையைச் செய்யப் போறோம்ன்னு அது நினைச்சுடக் கூடாது இல்லியா?


அதான் அது கூட இன்னும் மூணு குதிரைகள் இருக்கிற மாதிரி நம்ப வெச்சேன்.அதுக்கும் நம்பிக்கை வந்துடுச்சு. சரசரவென காரை வெளியே இழுத்துடுச்சு!


அன்பான வார்த்தைகளைச் சொல்வதற்கு நாம் காசு பணம் எதுவும் செலவழிக்க வேண்டியதில்லை. ஆனால், அவை சம்பாதித்துக் கொடுப்பவையோ மிக ஏராளம், இதையே பிரெஞ்ச் கணிதவியலாளரும், தத்துவவியலாளருமான பிளெய்ஸ் பாஸ்கல் மிக அற்புதமாகச் சொல்லியிருக்கிறார்.


வார்த்தைகளின் மகிமையோ அபாரமானது.
அதனால் தான் நல்ல நல்ல சொற்களைப் பேச வாய்ப்பு இருக்கும்போது,.. கடுஞ்சொற்களை ஏன் பேச வேண்டும் என்பதையே கனியிருப்பக் காய் கவர்ந்தற்று என்கிறார் வள்ளுவரும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *