• Thu. May 9th, 2024

பாப்பாபட்டி கிராம மக்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் – முதல்வர் முக ஸ்டாலின்!..

Byகுமார்

Oct 2, 2021

மதுரை மாவட்டம் பாப்பாபட்டி கிராம மக்களின் சார்பாக நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் பொது மக்களால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் அனைத்தும் தமிழக அரசால் நிறைவேற்றப்படும் என்று தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் உறுதி அளித்தார்

அக்டோபர் 2 காந்தி ஜெயந்தியை முன்னிட்டு இன்று தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டங்கள் நடைபெறுகின்றன. அதன் தொடர்ச்சியாக மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தாலுகா செல்லம்பட்டி ஒன்றியத்திற்கு உட்பட்ட பாப்பாபட்டி கிராமசபை கூட்டத்தில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் இன்று கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர், கிராமங்களின் வளர்ச்சியை அடிப்படையாகக் கொண்டே இந்தியாவின் வளர்ச்சி உள்ளது. மூன்றாவது அரசாங்கமாக இயங்கும் உள்ளாட்சி நிர்வாகத்தை வலுப்படுத்துவது மிக மிக அவசியம். பல ஆண்டுகளாக பாப்பாபட்டி கீரிப்பட்டி நாட்டார்மங்கலம் மற்றும் விருதுநகர் மாவட்டத்திலுள்ள கொட்டகாச்சியேந்தல் கிராமங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடத்த முடியாத சூழல் இருந்தது. அப்போது தமிழக உள்ளாட்சித்துறை அமைச்சராகவும் துணை முதல்வராகவும் நான் இருந்தபோது, பொது மக்களிடம் பேசி சுமூக சூழலை உருவாக்கினோம். அச்சமயம் நடைபெற்ற மேற்குறிப்பிட்ட கிராமங்களின் உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்ற தலைவர்கள் சென்னைக்கு அழைத்து வரப்பட்டு அன்றைய தமிழக முதல்வர் கருணாநிதி சமத்துவ பெரு விழா என்ற பெயரில் விழா எடுத்து பாராட்டு தெரிவித்தார்.

அந்த விழாவில் கலந்து கொண்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் கருணாநிதிக்கு சமத்துவப் பெரியார் என்ற பட்டத்தைச் சூட்டினார். அன்றைக்கு மதுரை மாவட்ட ஆட்சித்தலைவராக இருந்த உதயசந்திரன் உள்ளாட்சித் துறை செயலராக இருந்த அசோக் வர்தன் ஷெட்டி ஆகியோரின் ஈடுபாடு மிக்க உழைப்பு தான் இங்கு ஜனநாயகம் மலர காரணமாக அமைந்தது.

கடந்த 10 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது திமுக தலைமையிலான தமிழக அரசு பொறுப்பேற்ற பின்னர் பல்வேறு வாக்குறுதிகளை தொடர்ந்து நிறைவேற்றி வருகிறோம். அந்த அடிப்படையில் உசிலம்பட்டி மக்களால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளை இந்த அரசு நிச்சயம் நிறைவேற்றும். இன்று நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்திலும் கிராமம் சார்ந்த பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன அவற்றை கண்டிப்பாக தமிழக அரசு நிறைவேற்றும் என்பதை உறுதி அளிக்கிறேன்.

பாப்பாபட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களுக்கு தேவையான வளர்ச்சித் திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறோம் மேலும் இந்த கிராம சபை கூட்டத்தில் பொதுமக்கள் முன்வைத்த 58 கிராம கால்வாய் திட்டம் உள்ளிட்ட கோரிக்கைகளை இந்த அரசு உறுதியாக நிறைவேற்றும் என்றார்.

பிறகு நாட்டாபட்டி கிராமத்தில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தை பார்வையிட்டு ஆலோசனை நடத்தினார். அங்கிருந்து புறப்பட்டுச் சென்ற தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் மதுரை மேலமாசி வீதியில் உள்ள காந்தி அரையாடை புரட்சி மேற்கொண்ட இல்லத்தில் காந்தியின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *