• Sat. Jun 14th, 2025
[smartslider3 slider="7"]

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி நகராட்சி திருக்குளம் தோட்டக்கார மடம் தெருவைச் சேர்ந்தவர் எம்.என்.நந்தன். இவர், கடந்த 4-ம் தேதி திருக்குளம் ரேஷன் கடையில் அரசு வழங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பு அடங்கிய பையை பெற்றார்.

வீட்டிற்கு சென்ற அவர், சமையல் செய்வதற்காக பொங்கல் தொகுப்பு பையில் இருந்த புளி பொட்டலத்தை பிரித்தார். அப்போது, புளியில் இறந்த நிலையில் பல்லி ஒன்று ஒட்டியிருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.இதுகுறித்து எம்.என்.நந்தன் கூறியதாவது: “கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக சமையல் செய்யும் தொழிலில் ஈடுபட்டு வருகிறேன். எங்கள் வீட்டில் நான் தான் பெரும்பாலும் சமையல் செய்வேன்.


சாம்பார் வைப்பதற்காக அரசு வழங்கிய பொங்கல் தொகுப்பு பையில் இருந்து புளி பொட்டலத்தை பிரித்தேன். அதில், பல்லியின் கண், வால் வந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்து, பொட்டலத்தை முழுவதுமாக பிரித்தபோது, இறந்த நிலையில் பல்லி இருந்தது.

அதை அப்படியே கவரில் போட்டு, ரேஷன் கடை விற்பனையாளர் சரவணனுக்கு தகவல் தெரிவித்தேன். அவரோ, ‘எனக்கு வந்த பொட்டலங்களை அப்படியே பையில் போட்டுக் கொடுத்தேன். எந்த பொருளையும் நான் பொட்டலமாக தயாரிக்கவில்லை’ என்றார். வருவாய் கோட்டாட்சியரிடமும் புகார் தெரிவித்தேன்” என்று அவர் கூறினார்.இதுகுறித்து, திருத்தணி வருவாய் கோட்டாட்சியர் மா.சத்யா கூறுகையில், “புளியில் பல்லி இருப்பதாக புகார் தெரிவித்த நபரை நேரில் அழைத்து விசாரணை நடத்தினோம். அவர், எங்களிடம் காட்டும்போது, பொங்கல் தொகுப்பில் வழங்கப்பட்ட புளி சுற்றப்பட்ட பையை காட்டாமல், வேறு கவரில் அடைக்கப்பட்ட புளியை காட்டினார்.

புளியில் பல்லி இருப்பதாக கூறும் அவர், அதே கவரில் ரேஷன் கடை விற்பனையாளரிடம் காண்பித்து இருக்கலாம். அவர் வீட்டிற்கு எதிரில்தான் சம்பந்தப்பட்ட ரேஷன் கடை உள்ளது. தீர விசாரித்த பின்னர் தான் உண்மை தெரியவரும். இதுவரை, பொங்கல் தொகுப்பில் குறை இருப்பதாக யாரும் கூறவில்லை” என்றார்.