• Fri. Mar 29th, 2024

கர்ப்பிணி யானைக்கு பழத்தில் வெடிவைத்து கொன்ற விவகாரம்: ஓராண்டுக்கு பிறகு சரணடைந்த குற்றவாளி…

Byமதி

Oct 20, 2021

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள மலப்புரம் சைலண்ட் பள்ளத்தாக்கின் அருகே கடந்த 2020 ஆம் ஆண்டு மே மாதம் 27ம் தேதி, 15 வயதான கர்ப்பிணி யானை ஒன்று, காட்டுப் பன்றிக்காக வைக்கப்பட்டிருந்த வெடிமருந்து நிரப்பப்பட்ட அன்னாச்சிப் பழத்தை சாப்பிட முயன்றது. அப்போது பழம் வெடித்துச் சிதறியதில் யானையின் தாடை மற்றும் நாக்கு சிதைந்து படுகாயமடைந்தது. 2 நாட்களாக தாங்க முடியாத வலியை அனுபவித்த வந்த அந்த கர்ப்பிணி யானை, அங்குள்ள நதி நீரில் நின்றபடியே தனது வயிற்றில் வளரும் சிசுவுடன் உயிரைவிட்டது. இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி பலரின் மனதையும் உலுக்கியது. நாடு முழுவதும் மிகப்பெரும் அதிர்வலைகளை உண்டாக்கிய இக்கொடூரச் செயலுக்கு பலரும் கண்டனங்கள் தெரிவித்தனர்.

கோழிக்கோட்டில் இருந்து வனவிலங்கு குற்றங்கள் தடுப்பு விசாரணைக் குழுவை இச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொள்வதற்காக மாநில அரசு அனுப்பியது. மேலும், தொடர்புடைய குற்றவாளிகளை கண்டுபிடிக்க உதவி செய்தால் ரூ.50 ஆயிரம் சன்மானம் அளிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் இந்த வழக்கில் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்ட அப்துல் கரீம் என்பவர் இன்னும் தலைமைறைவாக உள்ள நிலையில், இரண்டாவது குற்றவாளியான அவரது மகன் ரியாசுதீன் கடந்த 16ம் தேதி அன்று பாலக்காட்டில் உள்ள நீதிமன்றத்தில் சரணடைந்து இருப்பதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். அவரை காவலில் எடுத்து விசாரிக்க வனத்துறையினர் திட்டமிட்டு வருகின்றனர். இது திட்டமிட்டு செய்யப்பட்டதா, இல்லை காட்டு பன்றிகளுக்காக வைக்கப்பட்டதா என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.

கர்ப்பிணி யானை கொல்லப்பட்டு ஓராண்டுக்கு பிறகு இந்த வழக்கில் ஒருவர் சரணடைந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தலைமறைவாக உள்ள அவரது தந்தை விரைவில் பிடிபடுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *