• Thu. May 23rd, 2024

தாயை கதற வைத்த கொடூர மகன்…காக்க போராடிய வளர்ப்பு நாய்!..

By

Aug 22, 2021

நீரின்றி கூட உலகு அமையலாம்… ஆனால் தாயின்றி உயிர்கள் பிறப்பது கிடையாது. அதனால் தாயை கடவுளுக்கு நிகராக ஒப்பிட்டு போற்றிப் புகழ்கிறோம். ஆனால் பணத்திற்காக வயதான தாயை சாலையில் இழுத்துப்போட்டு அடிக்கும் கொடூர மகனின் வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது.

நாமக்கல் மாவட்டம் பரமத்தி பொன்னேரிபட்டியைச் சேர்ந்தவர் நல்லம்மாள், 65 வயதான இவர் விவசாய கூலி வேலை செய்து வாழ்க்கை நடத்தி வருகிறார். இவரது கணவர் சின்னசாமி கடந்த ஆண்டு உடல் நிலை சரியில்லாமல் காலமானார். மகள் கோமதி, மகன் சண்முகம் ஆகியோருக்கு திருமணமான நிலையில் அவர்கள் தங்களது குடும்பத்துடன் வசித்து வருகின்றனர்.

கணவர் இறந்த பிறகு மகன் மற்றும் மகள் கண்டுகொள்ளாமல் விட்டதால் தனியே வசித்து வரும் நல்லம்மாள், இந்த தள்ளாத வயதிலும் அரசு கொடுக்கும் 100 நாள் வேலை திட்டத்தில் கூலி வேலை செய்து தன்னுடைய அன்றாட ஜீவிதத்தை நடத்தி வருகிறார். நல்லம்மாளின் கணவர் உயிரோடு இருந்த போது மகன் சண்முகத்திற்கு நான்கரை ஏக்கர் விவசாய நிலம் மற்றும் ஒரு லட்சம் ரூபாய் ரொக்க பணத்தை கொடுத்துள்ளார். இவ்வளவையும் வாங்கிக்கொண்டு தாய்க்கு ஒருவேளை உணவு கூட கொடுக்க முன்வராத சண்முகம், அவரை ரோட்டில் இழுத்து போட்டு அடித்துள்ளது கொடூரத்தின் உச்சம்.

கணவர் கையில் இருந்த அனைத்தையும் மகனுக்கு கொடுத்துவிட்ட நிலையில், நல்லம்மாளின் கைவசம் இருந்ததோ கொஞ்சம் நகைகளும், குடியிருக்கும் வீடும் மட்டும் தான். நடை தளர்ந்த காலத்தில் உதவுமே என்பதற்காக நகைகளை விற்று அதில் கிடைத்த ரூ.3 லட்சம் பணத்தை வங்கியில் டெபாசிட் செய்வதற்காக நல்லம்மாள் வீட்டில் வைத்திருக்கிறார்.

இந்நிலையில் வீட்டில் இருக்கும் 3 லட்சம் ரூபாயையும், மூதாட்டி குடியிருக்கும் வீட்டினையும் தனக்கு வழங்க வேண்டும் என மகன் சண்முகம், நல்லம்மாளிடம் அடிக்கடி பிரச்சினை செய்து வந்துள்ளார்.

இந்த நிலையில் நேற்று மாலை நல்லம்மாளை சந்தித்த சண்முகம், மற்றும் அவரது மனைவி ஜானகி ஆகியோர் சென்றுள்ளனர். வீடு மற்றும் ரொக்கப் பணத்தை ‘எங்களிடம் கொடுத்துவிடு’ எனக்கூறி கூலி வேலை செய்து வாழ்க்கை நடத்தி வந்த தாய் நல்லம்மாளிடம் தகராறில் ஈடுபட்டுள்ளனர்.

இதில் ஒரு கட்டத்தில் நல்லம்மாளின் கையில் வைத்திருந்த வீட்டு சாவியை பிடுங்குவதற்காக மகன் சண்முகம் முயன்றுள்ளார். நல்லம்மாள் சாவியை தனது கைக்குள் வைத்து இறுக்கமாக பற்றிக்கொள்ளவே, அந்த கையை பிடித்து தரதரவென ரோடு வரை இழுத்து வந்து தகராறு செய்துள்ளார். புடவை ஒருபுறம் சரிந்து விழ, மறுபுறம் சாவியை கொடு என மகன் எட்டி, எட்டி உதைக்க அவமானம், ஏமாற்றம், வலி என அனைத்தையும் ஒன்று திரட்டி நல்லம்மாள் கதறியது காண்போரை கண்ணீர் சிந்த வைத்துள்ளது.


பெற்ற தாயை ரோட்டில் வைத்து அடித்து கையை பிடித்து தரதரவென இழுத்து கொடுமைபடுத்தும் மகன் மற்றும் மருமகளின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் அதே சமயத்தில், நல்லம்மாள் படும் கொடுமைகளை காண சகிக்காமல் நாய் ஒன்று சண்முகத்தை பார்த்து சீறிய படியும், சத்தமாக குலைத்த படியும் பாயும் காட்சிகள் மனதை உலுக்குகிறது. ஒருவேளை உணவிட்ட நாய்க்கு இருக்கும் பாசம் கூட, உயிர் கொடுத்து… உரு கொடுத்து… ஆளாக்கிய மகனுக்கு இல்லையே என அப்பகுதி மக்கள் ஆதங்கப்படுகின்றனர். வயதான மூதாட்டியை முரட்டுத்தனமாக தாக்கிய மகன் சண்முகம் மற்றும் மருமகள் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *