
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை மற்றும் மருத்துவக்கல்லூரி வளாகங்களில் கட்டப்பட்டு வரும் புதிய கட்டிடப் பணிகளை சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆய்வு நடத்தினார். உடன் மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர் மற்றும் டீன் ரத்தின்வேலு ஆகியோர் பங்கேற்றனர்.
பின்னர் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அளித்த பேட்டியில்,
அனைத்து மாவட்டங்களிலும் தொற்று பாதிப்பு குறைந்துவிட்டது. சென்னை, கோவையில் மட்டும் 100-க்கும் மேல் தொற்று பதிவாகி உள்ளது. தற்போது பெரும்பாலான மக்கள் மாஸ்க் அணியாமல் உள்ளனர். மக்கள் முறையாக மாஸ்க் அணிய வேண்டும்.
மதுரை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகங்களில் பல்வேறு வளர்ச்சி பணிகள் நடைபெற்று வருகின்றன. 121.8 கோடி மதிப்பில் கட்டப்படும் 23 அறுவை சிகிச்சை அரங்குகள் அடங்கிய 7 மாடி கட்டிடம் புதிய மருத்துவமனை கட்டுமான பணிகள் அடுத்தாண்டு அக்டோபர் மாதம் முடிவடையும். அந்த மருத்துவமனைக்கு 173 கோடி ரூபாய் மதிப்பில் உபகரணங்கள் வாங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மருத்துவக் கல்லூரி வளாகத்தில் 112 கோடி செலவில் கட்டப்படும் கூடுதல் வளாகம் இந்தாண்டு இறுதியில் முதல்வரால் திறந்து வைக்கப்பட உள்ளது.
டெங்கு நோயை கட்டுப்படுத்த தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து விவாதிக்கப்பட்டு உள்ளது. தமிழகம் முழுவதும் இந்த சீசனில் 3 இறப்புகள் பதிவாகி உள்ளது. 2021 ஆம் ஆண்டு இதுவரை 3187 நபர்கள் டெங்கு பாதித்து சிகிச்சை பெற்றுள்ளனர். தற்போது 351 நபர்கள் சிகிச்சையில் உள்ளனர். டெங்கு நோய் தடுப்பு பணிகளில் கடந்த ஆண்டு 29,875 மாதிரிகள் எடுக்கப்பட்டன, இந்தாண்டு
92,047 மாதிரிகள் எடுக்கப்பட்டன.
கடந்த ஆண்டுகளை விட இந்தாண்டு தாக்கம் குறைவாக இருந்தாலும் முன்னெச்சரிக்கை அவசியம்.
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான ஆலோசனைகளை ஜெய்க்கா நிறுவனம் துவக்கி உள்ளது. கட்டுமானம் நிறைவடையும் வரை வாடகை கட்டிடத்தில் தற்காலிக சேவைகளை துவக்க மத்திய அரசு தயார் என தெரிவித்து உள்ளார்கள். மேலும், அதற்கான வாடகை தொகையை செலுத்தவும் தயார் என கூறியுள்ளார்கள்.
தோப்பூர் மருத்துவமனையில் எய்ம்சின் தற்
காலிக வெளி நோயாளிகள் பிரிவை துவக்குவது தொடர்பான இடம், பணியாளர்கள் வசதி குறித்து அறிக்கை கேட்டு ஆலோசனை நடத்தி அரசு முடிவெடுக்கும்.
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அமைக்கப்பட்ட பிரதிநிதிகள் அக்டோபர் 20 ஆம் தேதி சென்னை வருகிறார்கள், அப்போது ஆலோசித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்படும்.
கொரோனா பாதிப்பு தொடர்பாக மரபியல் ரீதியாக நடத்தப்பட்ட ஆய்வுகளில் முதல் 50 மாதிரிகளில் 42 மாதிரி முடிவுகளில் அதிவேக டெல்டா வகை மாறுதல் ஏற்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. கொரோனா வைரஸ் உருமாறினாலும், அதன் குணத்தில் மாற்றம் இல்லை, மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
18 வயதுக்கு கீழுள்ள வயதினருக்கு தடுப்பூசி செலுத்துவது குறித்து மத்திய அரசின் தொழில்நுட்ப கமிட்டி ஒப்புதல் வழங்கியது பின்னர், குழந்தைகளுக்கு முன்னுரிமை அளித்து தடுப்பூசி செலுத்தப்படும்.
கொரோனா நோய் பாதித்து உயிரிழந்த சுகாதார பணியாளர்களில் 34 நபருக்கு நிவாரண தொகை கொடுக்கப்பட்டு உள்ளது. மீதமுள்ள நபர்களுக்கு பரிசீலனையில் உள்ளது.
மத்திய அரசு சார்பில் வழங்கப்படும் நிவாரண தொகைக்கான படிவங்களை எளிமைப்படுத்தி உள்ளார்கள். மாவட்ட ஆட்சியர் மற்றும் இணை இயக்குநர் ஒப்புதல் மட்டும் இருந்தாலே அவர்களுக்கு நிவாரண தொகை வழங்கும் வகையில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன என அவர் தெரிவித்துள்ளார்.
