முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா பிறந்த நாளை முன்னிட்டு, வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி நடைபெற்றது. போட்டியில் காளைகள் சீறிப்பாய்ந்தன.
சிவகங்கை மாவட்டம், சருகனியில் முன்னாள் முதல்வர்களான எம்.ஜி.ஆர், ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு வடமாடு மஞ்சுவிரட்டு போட்டியானது நடைபெற்றது. இதில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த காளைகளும் மாடுபிடி வீரர்களும் பங்கேற்று விளையாடின.

சருகனி பேருந்து நிலையம் எதிரே உள்ள திறந்த வெளியில் அதிமுகவின் மாவட்ட இளைஞர், இளம்பெண் பாசறை சார்பில் முன்னாள் முதலமைச்சர்களான எம்.ஜி.ஆர் ஜெயலலிதா பிறந்த நாளை முன்னிட்டு ஐந்தாம் ஆண்டு மாபெரும் வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி நடைபெற்றது. மாவட்ட இணைச்செயலாளர் பிரபு ஏற்பாட்டின் பேரில் நடைபெற்ற இந்த வடமாடு மஞ்சுவிரட்டு போட்டியினை முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், சிவகங்கை சட்டமன்ற உறுப்பினர் செந்தில்நாதன் ஆகியோர் துவக்கி வைத்தனர்.

மேலும் இந்நிகழ்ச்சியில் அம்மா பேரவை மாவட்ட செயலாளர் ராமு. இளங்கோ, சிவகங்கை நகர செயலாளர் ராஜா, மற்றும் ஒன்றிய செயலாளர்கள் மற்றும் கழகத் தொண்டர்கள் கலந்து கொண்டனர். போட்டியில் சிவகங்கை மாவட்டம் மட்டுமல்லாது அருகில் உள்ள புதுக்கோட்டை, ராமநாதபுரம், மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் 13 காளைகள் பங்கேற்று சீறி பாய்ந்தன. காளை ஒன்றுக்கு 20 நிமிடம் ஒதுக்கப்பட்ட நிலையில் 9 வீரர்கள் கலந்து கொண்டு காளையை அடக்கினர். பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமான வீரர்கள் பங்கேற்ற இந்த வடமாடு மஞ்சுவிரட்டு போட்டியில் ஒவ்வொரு சுற்றிலும் வெற்றி பெற்ற காளை அல்லது காளையர்களுக்கு பத்தாயிரம் பரிசு தொகையும், கேடயமும் வழங்கப்பட்டது. இந்த வடமாடு மஞ்சுவிரட்டு போட்டியை காண இந்த கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் மட்டும் இல்லாமல் சுற்றியுள்ள ஏராளமான கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் பங்கேற்று கண்டு களித்தனர்.
