பொது வேலைநிறுத்தம், கடை அடைப்பு, கல்வி போன்ற விஷயங்களில் தமிழக அரசு எடுக்கும் முடிவுகள் புதுச்சேரி அரசாங்கத்தால் வழிமொழியப்படும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகாக தமிழக அரசு மேற்கொண்ட ஞாயிற்றுக்கிழமை பொது ஊரடங்கை பாண்டிச்சேரி அரசாங்கம் கடைப்பிடிக்கவில்லை
இதனால் எல்லைப் புற கிராமங்களில்தமிழக – புதுச்சேரி எல்லையில் ஒரே சாலையில் புதுச்சேரி பகுதியில் கடைகள் திறக்கப்பட்டும், தமிழகப் பகுதியில் கடைகள் அடைக்கப்பட்டும் இருந்த விநோதக் காட்சி அரங்கேறியது.புதுச்சேரி பகுதி தமிழகத்தையொட்டி அமைந்துள்ளது. தமிழகப் பகுதிகளும், புதுச்சேரி பகுதிகளும் மாறி மாறி வரும் தன்மை உடையவை. புதுச்சேரி எல்லைப் பகுதிக்குள் தமிழக கிராமங்களும் உள்ளன.கரோனாவையொட்டி தமிழகத்தில் முழு ஊரடங்கு இன்று நடைமுறைக்கு வந்தது. புதுச்சேரியில் ஊரடங்கு இல்லை. உதாரணமாக திருக்கனூரில் ஒரே கடைவீதியில் புதுச்சேரியில் உள்ள ஒரு பகுதியில் கடைகள் திறந்திருந்தன. இதன் எதிரே தமிழகப் பகுதியிலுள்ள கடைகள் மூடப்பட்டிருந்தன. இந்தக் கடைவீதி புதுச்சேரி- விழுப்புரம் சாலையில் அமைந்துள்ளது. ஒரு பகுதியில் திருக்கனூர் பகுதியில் கடைகள் திறந்து இருக்கும் பகுதி புதுச்சேரியில் வருகிறது. சாலையின் மற்றொரு பகுதி விழுப்புரம் மாவட்டம் சித்தலம்பட்டு பகுதியைச் சேர்ந்தது.
ஊரடங்கால் தமிழகத்தில் இருந்து புதுவை வழியாகச் செல்லும் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயக்கப்படவில்லை. அதுபோலப் புதுவையில் இருந்து தமிழகத்திற்கு இயக்கப்படும் தமிழக அரசுப் பேருந்துகளும் இயக்கப்படவில்லை.
இதனால் புதுவை பேருந்து நிலையத்தின் பெரும்பகுதி வெறிச்சோடிக் காணப்பட்டது. புதுவைக்குள் இயக்கப்படும் பேருந்துகள் மட்டுமே புதுவையில் இயங்கியது. எல்லைப் பகுதிகளில் தமிழக போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். புதுவையில் இருந்து செல்லும் வாகனங்களைத் தமிழகப் பகுதிக்குள் நுழையத் தடை விதித்தனர். மருத்துவம் மற்றும் அரசுப் பணி மற்றும் அத்தியாவசியப் பணிக்காகச் செல்லும் வாகனங்களை மட்டுமே அனுமதித்தனர்.
புதுவையில் வார இறுதியில அதிக அளவில் சுற்றுலாப் பயணிகள் வருவார்கள். இதனால் புதுவையின் கடற்கரைச் சாலை உள்ளிட்ட முக்கிய இடங்களில் கூட்டம் களை கட்டும். மேலும் வார இறுதி நாட்களில் புதுவையில் உள்ள வியாபாரிகளின் வியாபாரம் அதிகரிக்கும்.
ஆனால், இந்த வாரம் வெள்ளிக்கிழமை முதலே சுற்றுலாப் பயணிகளின் வருகை குறைவாக இருந்தது. இன்று தமிழகத்தில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டிருந்ததாலும், பேருந்துகள் இயக்கப்படாததாலும் முற்றிலுமாக சுற்றுலாப் பயணிகளின் வருகை குறைந்தது.