

மதுரை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ மாணவர்கள் சமஸ்கிருதத்தில் உறுதிமொழி எடுத்ததாக எழுந்த புகாரில் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார் கல்லூரி முதல்வர் ரத்தினவேலு. இந்நிலையில் மீண்டும் மதுரை அரசு மருத்துவக்கல்லூரி முதல்வராக பொறுப்பேற்றுள்ள மருத்துவர் ரத்தினவேல் கல்லூரி வளாகத்தில் உள்ள அவரது அறையில் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார்.
“மூத்த மருத்துவ மாணவர்கள் யாருடைய ஒப்புதலையும் பெறாமல் அவர்களாக உறுதிமொழி படித்தார்கள். அதனால் சில சர்ச்சைகள் எழுந்தன. அது குறித்து,மருத்துவ துறை அமைச்சரை நேரில் சந்தித்து விளக்கமளித்து வருத்தம் தெரிவித்தேன்.உடனடியாக முதலமைச்சர் கருணை உள்ளத்தோடு, கொரோனா காலத்தில் நாங்கள் ஆற்றிய சேவையை நினைவில் கொண்டு என்னை மீண்டும் முதல்வராக நியமித்து உத்தரவு பிறப்பித்தது உள்ளார்.உடனடியாக முடிவெடுத்த முதலமைச்சருக்கும், மருத்துவத்துறை அமைச்சருக்கும் நன்றி.அரசு எங்கள் மேல் வைத்துள்ள நம்பிக்கை இன்னும் சிறப்பாக பணிபுரிவதற்கு உத்வேகம் அளிக்கிறது.பொறுப்புடன் சரியான செய்தியை வெளியிட்டு அறம் சார்ந்த ஒத்துழைப்பை கொடுத்த ஊடகத்தினருக்கு நன்றி” என தெரிவித்தார்.

