

பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் உண்டியல்கள் 11 நாட்களில் நிரம்பியதைத் தொடர்ந்து நேற்றும், நேற்று முன் தினமும் உண்டியல்கள் திறக்கப்பட்டு எண்ணப்பட்டதில் பக்தர்கள் காணிக்கை வரவு ரூ. 3.47 கோடியை தாண்டியது.

பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலுக்கு தைப்பூசம் நிறைவு பெற்ற நிலையிலும் நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் காவடிகளுடன் வருகை தந்தவண்ணம் உள்ளனர். இந்நிலையில் 11 நாட்களில் திருக்கோயில் உண்டியல்கள் நிறைந்ததைத் தொடர்ந்து நேற்றும், நேற்று முன் தினமும் உண்டியல்கள் திறக்கப்பட்டு எண்ணப்பட்டது. இதில் பக்தர்கள் காணிக்கை வரவு ரொக்கம் ரூபாய் 3 கோடியே 47 இலட்சத்து 05 ஆயிரத்து 5687 கிடைத்துள்ளது. தங்கம் 379 கிராமும், வெள்ளி 44 ஆயிரத்து 067 கிராமும் கிடைத்தது.
மலேசியா, சிங்கப்பூர், அமெரிக்கா, ஐப்பான், ஆஸ்திரேலியா, உள்ளிட்ட பல்வேறு நாட்டு கரன்சிகள் 1,632 ம் கிடைத்தன. இவை தவிர பித்தளை வேல், ரிஸ்ட் வாட்ச், ஏலக்காய், முந்திரி, நவதானியங்கள், பட்டாடைகளையும் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர். கடந்த பிப்.14ம் தேதி உண்டியல் திறக்கப்பட்ட போது ரூ.3.31 கோடி கிடைத்தது குறிப்பிடத்தக்கது. உண்டியல் எண்ணிக்கையில் பழனியாண்டவர் கல்லூரி மாணவியர், திருக்கோயில் அலுவலர்கள், வங்கி பணியாளர்கள் என ஐநூறுக்கும் மேற்பட்டோர் ஈடுபட்டனர். நிகழ்ச்சியில் பழனிக்கோயில் இணை ஆணையர் மாரிமுத்து, துணை ஆணையர் வெங்கடேஷ், உதவி ஆணையர் லட்சுமி, அறங்காவலர்கள் என பலர் பங்கேற்றனர்.


