இன்று தைப்பூசி திருவிழா என்பதால் தமிழ்நாடு முழுவதும் ஆறுபடை முருகன் கோவில்களில் ஏராளமான பக்தர்கள் குவிந்துள்ளனர்.
தமிழ் கடவுளான முருகனுக்கு தனிச்சிறப்புடன் தைபூசத் திருவிழா கொண்டாடப்படுகிறது. இந்த நாள் கடவுள் முருகனுக்கு உகந்த நாள். அதே போல் இன்று பவுர்ணமி தினம். தைப்பூசத்தையொட்டி தமிழ்நாடு முழுவதும் முருகன் கோவில்களில் லட்சக்கணக்கான மக்கள் குவிந்துள்ளனர். அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனியில் தைப்பூசத் திருவிழா கடந்த 29ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நேற்று மாலை நடைபெற்றது. முத்துக்குமாரசாமி எழுந்தருளிய தேரை, பக்தர்கள் வடம்பிடித்து இழுத்தனர். அதைத் தொடர்ந்து, பக்தர்கள் காவடி எடுத்தும், அலகு குத்தியும் தங்களது நேர்த்திக் கடனை செலுத்தி, முருகப்பெருமானை வணங்குகின்றனர். இதே போல் திருச்செந்தூர், பழனி, திருப்பரங்குன்றம், மருதமலை, திருத்தணி, பழமுதிர்ச்சோலை ஆகிய வீடுகளிலும் பக்தர்கள் குவிந்துள்ளனர். திருச்செந்தூரில் கடலில் புனித நீராடி, மாலை அணிந்து, அலகு குத்தி, காவடி எடுத்து, அரோகரா கோஷத்துடன் பக்தர்கள் வழிபாடு செய்து வருகின்றனர். இதே போல், முருகனின் அறுபடை வீடுகளிலும் பக்தர்கள் விரதம் இருந்து அதிகாலை முதலே சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
தைப்பூச திருவிழா…ஆறுபடை வீடுகளில் குவிந்த பக்தர்கள்!!
