• Mon. Aug 10th, 2026
WhatsAppImage2026-08-06at2018242
previous arrow
next arrow
Read Now

பயங்கரவாதிகள் தாக்குதல்
10 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு

சோமாலியாவில் ராணுவ தளத்துக்குள் புகுந்து பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 10 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.
கிழக்கு ஆப்பிரிக்க நாடான சோமாலியாவில் மத அடிப்படையிலான அரசை நிறுவ அல்-கொய்தா ஆதரவு பெற்ற அல்-ஷபாப் பயங்கரவாதிகள் முயற்சித்து வருகின்றனர். நாட்டின் பல்வேறு பகுதிகளை தங்களது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் இவர்கள் அரசுக்கு எதிராக தொடர்ச்சியாக பயங்கரவாத தாக்குதல்களை அரங்கேற்றி வருகின்றனர். இவர்களை ஒடுக்க கடுமையாக போராடி வரும் சோமாலியா ராணுவம் போராளி குழுக்களின் உதவியுடன் பயங்கரவாதிகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதிகளை மீட்டெடுத்து வருகிறது.
அந்த வகையில், சோமாலியாவின் மத்திய கல்காடுட் பிராந்தியத்தில் பயங்கரவாதிகளின் பிடியில் இருந்த கயிப் என்கிற நகரை நீண்ட போராட்டத்துக்கு பின் ராணுவம் கடந்த வாரம் மீட்டது. அதை தொடர்ந்து அந்த நகரில் இருந்து பயங்கரவாதிகள் விரட்டியடிக்கப்பட்டனர். இந்த நிலையில் கயிப் நகரில் உள்ள ராணுவ தளத்தின் மீது நேற்று முன்தினம் மாலை பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். முதலில் வெடிகுண்டுகள் நிரப்பப்பட்ட 2 கார்களை ராணுவ தளத்தின் நுழைவாயில் மீது மோதி வெடிக்க செய்தனர்.
வெடிகுண்டுகள் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியதில் அந்த பகுதியே அதிர்ந்தது. அதைத்தொடர்ந்து மோட்டார் சைக்கிள்களில் வந்த பயங்கரவாதிகள் ராணுவ தளத்துக்குள் நுழைந்து சரமாரியாக துப்பாக்கி சூடு நடத்தினர். இதை தொடர்ந்து, ராணுவ வீரர்கள் தங்களது துப்பாக்கிகளால் அவர்களுக்கு தக்கபதிலடி கொடுத்தனர். இருதரப்புக்கும் இடையே கடுமையான துப்பாக்கி சண்டை நடந்தது. இந்த சண்டை பல மணி நேரத்துக்கு நீடித்தது. இறுதியில் ராணுவ தளத்துக்குள் புகுந்து தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் 20 பேரும் சுட்டுக்கொல்லப்பட்டதாக ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர்.
அதே சமயம் பயங்கரவாதிகளின் தாக்குதலில் 10 ராணுவ வீரர்கள் பலியானதாகவும், மேலும் பல வீரர்கள் படுகாயம் அடைந்ததாகவும் அவர்கள் கூறினர். இதற்கிடையில் இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்று அல்-ஷபாப் பயங்கரவாத இயக்கம் வெளியிட்ட அறிக்கையில் தாக்குதலில் 37 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதாகவும், ஏராளமான ராணுவ ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது. கடந்த மாத இறுதியில் சோமாலியா தலைநகர் மொகாதிசுவில் அல்-ஷபாப் பயங்கரவாதிகள் நடத்திய இரட்டை கார் குண்டு வெடிப்பில் 120-க்கும் மேற்பட்டோர் பலியானது நினைவுகூரத்தக்கது.