• Wed. Feb 19th, 2025

இடத்தகராறில் கோவில் பூசாரி படுகொலை

ByP.Thangapandi

Jul 3, 2024

உசிலம்பட்டி அருகே இடத்தகராறில் கோவில் பூசாரியை இளைஞர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது – இளைஞரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே செக்காணூரணியை அடுத்துள்ள சொக்கநாதபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் பவுன்ராஜ்., அதே ஊரில் உள்ள அங்காள ஈஸ்வரி கோவிலில் பூசாரியாக உள்ளார்.

இதே ஊரைச் சேர்ந்த முருகன் என்பவருக்கு சொந்தமான இடம் 40 சென்ட் இந்த கோவிலின் அருகே உள்ளது, இதில் 10 சென்ட் கோவில் இடத்தில் உள்ளதாகவும், 10 சென்ட் கோவிலுக்கு சொந்தம் என பூசாரி பவுன்ராஜ்-க்கும், தனக்கு சொந்தம் என முருகனுக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்று இரவு கோவிலில் உள்ள விளக்குகளை போடுவதற்காக இருசக்கர வாகனத்தில் வந்த பூசாரி பவுன்ராஜ்-யை கோவில் முன்பு இடைமறித்த முருகன், இந்த இடப்பிரச்சனை தொடர்பாக தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது, இதில் இடப்பரிச்சனையை நீதிமன்றம் மூலம் தீர்த்துக் கொள்ளுமாறு கூறி, பூசாரி பவுன்ராஜ் தெரிவிக்க இருவருக்கும் வாக்குவாதம் முற்றி, முருகன் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் பூசாரி பவுன்ராஜ்-யை தலை, கழுத்து பகுதியில் சரமாரியாக வெட்டியுள்ளார்.

படுகாயமடைந்த பூசாரி பவன்ராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்த நிலையில் தகவலறிந்து விரைந்து வந்த செக்காணூரணி காவல் நிலைய போலீசார் உடலை மீட்டு உடற்கூறாய்விற்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துவிட்டு முருகனைக் கைது செய்து தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இடத்தகராறில் பூசாரி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.