• Thu. Apr 25th, 2024

கோவில் நிலங்களை யாருக்கும் பட்டா போட்டு கொடுக்க கூடாது – சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி!..

Byadmin

Aug 23, 2021

கோவில் நிலங்களை பிற பயன்பாட்டிற்கு பயன்படுத்தக் கூடாது என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகிலுள்ள வையப்பமலை சுப்ரமணியசாமி கோவில் அறநிலையத் துறை கட்டுப்பாட்டிலிருந்து வருகிறது. இந்தக் கோவிலுக்குச் சொந்தமான புறம்போக்கு நிலம் 10.64 ஹெக்டேர் விவசாயம் அல்லது கோவிலுக்கு வருவாயை ஈட்டக்கூடிய கட்டுமானங்களை உருவாக்க பயன்படுத்தலாம் என அறநிலையத் துறை சட்டம் கூறுகிறது. ஆனால் கோவில் புறம்போக்கு நிலத்தை கிராம நத்தமாக மாற்றிய வருவாய்த் துறை, அந்த நிலத்தை 81 பேருக்கு இலவச வீட்டு மனை பட்டா போட்டு கொடுத்துள்ளது.

இதனை எதிர்த்து கோவில் சார்பில் பரம்பரை அறங்காவலர் தொடர்ந்துள்ள வழக்கில், கோவில் நிர்வாகம் மற்றும் அறநிலையத்துறை தடையில்லா சான்று பெறாமல் பட்டா வழங்க கூடாது என விதிகள் உள்ள நிலையில், அவற்றை புறந்தள்ளிவிட்டு வருவாய்த்துறை சார்பில் பட்டா வழங்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. கோவில் நிலமானது கோவில் விழா மற்றும் சடங்குகளுக்கு மட்டுமே தற்காலிகமாக பயன்படுத்தலாம் என்றும், அவ்வாறு இல்லாவிட்டால் ஆக்கிரமிப்பாகத்தான் கருத வேண்டுமென மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வழக்கு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தது.அப்போது வட்டாட்சியர் சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், பட்டா வழங்கபட்ட இடம் அறநிலையத் துறைக்கு சொந்தமானது என்பதை நிரூபிக்க எந்த ஆவணங்களையும் தாக்கல் செய்யவில்லை எனவும், அரசு நிலம் தான் பட்டா போடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. பின்னர் உத்தரவு பிறப்பித்த நீதிபதி, கோவிலின் நிலத்தை அதன் வருமானத்திற்கு வழிசெய்வதை தவிர பிற நோக்கத்திற்காக பயன்படுத்தவோ, வேறு யாருக்கு வழங்கவோ முடியாது என அறநிலைய துறை சட்டம் மற்றும் வருவாய் துறை நிலை விதிகள் உள்ளதால், அறநிலையத்துறை ஆணையரின் தடையில்லா சான்று இல்லாமல் பட்டா மாற்றம் செய்யக்கூடாது என உத்தரவிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *