நடிகர் அசோக் செல்வன் நடித்துள்ள சபா நாயகன் படத்தின் பர்ஸ்ட்லுக் மற்றும் டீசர் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழில் ‘சூதுகவ்வும்’ படத்தில் அறிமுகமாகி வித்தியாசமான கதைகளில் நடித்து வரும் அசோக் செல்வனுக்கு ‘ஓ மை கடவுளே’ திருப்புமுனை படமாக அமைந்தது. சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான ‘நித்தம் ஒரு வானம்’ திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இதைத்தொடர்ந்து இயக்குனர் சி.எஸ்.கார்த்திகேயன் இயக்கத்தில் அசோக் செல்வன் நடித்துள்ள திரைப்படம் ‘சபா நாயகன்’. மேகா ஆகாஷ் கதாநாயகியாக நடித்துள்ள இந்த படத்தில் கார்த்திகா முரளிதரன், சாந்தினி சௌத்ரி, மயில்சாமி, மைக்கேல் தங்கதுரை, உடுமலை ரவி, அருண் குமார், ஜெய்சீலன் சிவராம், ஸ்ரீராம் கிரிஷ், ஷெர்லின் சேத், விவியாசாந்த், அக்சயா ஹரிஹரன், துளசி சிவமணி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
லியோன் ஜேம்ஸ் இசையமைத்துள்ள இந்த படத்திற்கு பாலசுப்ரமணியம், தினேஷ் புருஷோத்தமன், பிரபு ராகவ் ஒளிப்பதிவு செய்துள்ளனர். கணேஷ் சிவா படத்தொகுப்பு செய்கிறார். இந்த நிலையில், ‘சபா நாயகன்’ திரைப்படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் மற்றும் டீசர் தற்போது வெளியாகியுள்ளது. இதனை நடிகர் சிவகார்த்திகேயன் தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டார். இந்த டீசர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.