சிவகாசி, ஸ்ரீ காளீஸ்வரி கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முன்னாள் மாணவர் சங்கத்தின் சார்பில் ஆசிரியர் தின விழா கொண்டாடப்பட்டது.

இவ்விழாவிற்குக் கல்லூரி முதல்வர் பாலமுருகன் தலைமை தாங்கினார். அவர்தம் உரையில், ஆசிரியர் என்பவர் மாணவர்களின் வாழ்க்கைக்கு வழிகாட்டுபவராகவும் அவர்களின் திறமையை அடையாளம் காண்பராகவும் இருக்க வேண்டும் என்றும் ஆசிரியரை மதிக்கக் கூடிய மாணவர்கள் வாழ்க்கையில் உயரத்தை அடைவார்கள்.

சமூக வளர்ச்சிப் பணிக்குத் தம்மை அர்ப்பணிப்பர். அத்தகைய மாணவர்களை உருவாக்கும் பொறுப்பு ஆசிரியர்களிடம் உண்டு என்றும் இன்றைய தலைமுறை மாணவர்கள் ஜென்-இசட் வகையைச் சார்ந்தவர்கள். எனவே, அவர்களுக்கு ஏற்ப ஆசிரியர்களும் தம்மை மாற்றிக் கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றோம் என்றும் வலியுறுத்திப் பேசினார்.

இவ்விழாவிற்குச் சிறப்பு விருந்தினராகக் கல்லூரியின் முன்னாள் மாணவரும் மதுரை காமராசர் பல்கலைக்கழக மொழியியல் துறை கௌரவ விரிவுரையாளருமான சண்முகராஜ் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். அவர்தம் உரையில், ஆசிரியர் என்பவர் பாடத்தை மட்டும் கற்றுத் தருபவர் அல்ல; மாணவர்களுக்கு வாழ்க்கையை வாழக் கற்றுக் கொடுப்பவர் ஆவார். மாணவர்களின் சிந்தனையை வளர்ப்பதிலும் நம்பிக்கையை வளர்ப்பதிலும் திறமையை அடையாளம் காண்பதிலும் ஆசிரியரே முக்கியப் பங்கு வகிக்கின்றார் என்றும் ஒரு மாணவனின் வெற்றிக்குப் பின்னால் பல ஆசிரியர்களின் அர்ப்பணிப்பு உள்ளது என்றும் மாணவனின் கல்லூரி வாழ்க்கை முடிந்தாலும் கல்லூரியுடனான உறவு தொடர வேண்டும் என்றும் கூறினார். மேலும், தொழில் வாய்ப்புகள், போட்டித் தேர்வுகள், உயர்கல்வி, ஆராய்ச்சி, தொழில்முனைவோர், புதிய தொழில்நுட்பம் போன்ற துறைகளில் வெற்றி பெற மாணவர்களுக்கு வழிகாட்ட வேண்டும் என்றும் ஒவ்வொரு மாணவனுக்குள்ளும் இருக்கும் மனிதநேயத்தை வெளிக்கொணரும் பொறுப்பு ஆசிரியருக்கு உண்டு என்றும் தெரிவித்தார்.
தொடர்ந்து, ஆசிரியர் தின விழாவிற்கான செய்திகளை இளநிலை உயிரித் தொழில்நுட்பவியல் மூன்றாம் ஆண்டு பயிலும் மாணவி லாவண்யாவும் இளநிலை வணிகக் கணினிப் பயன்பாட்டியல் இரண்டாமாண்டு பயிலும் மாணவி கன்னிகா தேவியும் வழங்கினர்.
ஆசிரியர்கள் மாணவர்களுக்குக் கல்வி கற்பித்தலோடு மட்டும் நின்றுவிடாமல் அறிவை வழங்கி, ஆற்றலை வளர்த்து, வாழ்க்கைக்கு வழிகாட்டுபவராகவும் இருக்கின்றனர் என்றும் ஆசிரியர்களின் அறிவுரையும் வழிகாட்டலுமே ஒரு மாணவனின் மனதில் நிலைத்து நிற்கும் என்றும் ஆசிரியர்கள் ஏற்றும் அறிவு விளக்கே மாணவர்களின் வாழ்க்கைப் பாதையை மிளரச் செய்யும் என்றும் தெரிவித்தனர்.
கல்லூரி ஆசிரியர்களுக்காக நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.

இவ்விழாவின் தொடக்கமாகக் கல்லூரியின் முன்னாள் மாணவர் சங்க உறுப்பினர் கோமதி அழகு சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்து வைத்து வரவேற்புரையாற்றினார். இவ்விழாவின் நிறைவில் கல்லூரியின் முன்னாள் மாணவர் சங்க உறுப்பினர் மகேஸ்வரன் நன்றி கூறினார்.








