பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவிலுள்ள உயர்நீதி மன்றங்களில் உள்ளூர் மொழிகளின் பயன்பாட்டை உறுதி செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்ற தலைமை நீதியரசர் என்.வி.ரமணா கேட்டுக் கொண்டிருப்பது வரவேற்கத்தக்கது. சென்னை உயர்நீதிமன்றத்தின் அலுவல் மொழியாக தமிழை அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ள நிலையில் தலைமை நீதிபதியின் பேச்சு நம்பிக்கையளிக்கிறது.
நீதி தேடும் ஏழை எளிய மக்களின் புகலிடமாக உயர்நீதிமன்றங்களை மாற்ற என்னென்ன பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று நீதித்துறையில் நம்பிக்கை கொண்டிருந்தவர்கள் வலியுறுத்தி வந்தார்களோ, அவை அனைத்தையும் உச்சநீதி மன்ற தலைமை நீதிபதி முன் மொழிந்திருக்கிறார்.
அவற்றில் முதன்மையானது உயர் நீதிமன்றங்களில் உள்ளூர் மொழிகள் அதிகம் பயன்படுத்தப்பட வேண்டும் என்பதாகும். இது சென்னை உயர்நீதிமன்ற வழக்கு மொழியாக தமிழ் அறிவிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை நிறைவேற உதவும்.
சென்னை உயர்நீதிமன்றத்தின் அலுவல் மொழியாக தமிழை அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை தமிழ்நாட்டைச் சேர்ந்த அனைத்துக் கட்சிகளாலும் நீண்ட காலமாக வலியுறுத்தப்பட்டு வருகிறது. கடந்த 2006-ம் ஆண்டு பாட்டாளி மக்கள் கட்சியின் வலியுறுத்தல் காரணமாக, தமிழை சென்னை உயர்நீதிமன்ற அலுவல் மொழியாக அறிவிக்கக் கோரும் தீர்மானத்தை அப்போதைய முதல்வர் கலைஞர் தமிழ்நாடு சட்டப்பேரவையில் கொண்டு வந்து நிறைவேற்றினார். ஆனால், 15 ஆண்டுகள் ஆகியும் அந்தத் தீர்மானம் அனுப்பப்பட்ட நிலையிலேயே முடங்கிக் கிடக்கிறது. உயர்நீதிமன்றத்தில் தமிழுக்கு அங்கீகாரம் கிடைக்கவில்லை. சட்டப்பேரவையின் தீர்மானத்திற்கு மத்திய அரசுகளிடமிருந்து கடந்த 15 ஆண்டுகளாக பதில் இல்லை.
எனவே, சென்னை உயர்நீதிமன்றத்தின் அலுவல் மொழியாக தமிழை அறிவிக்க வேண்டும் என்ற தமிழக சட்டப்பேரவையின் தீர்மானத்தை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு அனுப்பி அவரின் பரிந்துரையை பெற்று குடியரசுத் தலைவர் மூலம் அறிவிக்கை வெளியிடச் செய்யுமாறு மத்திய அரசை தமிழக அரசு வலியுறுத்த வேண்டும். தேவைப்பட்டால் பேரவையில் புதிய தீர்மானத்தை இயற்றி மத்திய அரசுக்கு அனுப்ப வேண்டும்’ என அறிக்கையில் கூறியுள்ளார்.