• Thu. Apr 18th, 2024

மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் கொரோனா வைரஸ் – கட்டுப்பாட்டு வளையத்துக்குள் சென்னை விமான நிலையம்

Byமதி

Nov 27, 2021

உலகையே புரட்டி போட்ட கொரோனா வைரஸ் தற்போது உருமாறிய வெளிநாடுகளில் பரவி வருகிறது. குறிப்பாக தென்ஆப்பிரிக்கா, பிரேசில், சீனா, நியூசிலாந்து, ஹாங்காங், வங்காளதேசம், இங்கிலாந்து, சிங்கப்பூர், ஜிம்பாப்வே உள்ளிட்ட 12 நாடுகளில் இதன் தாக்கம் அதிகமாக உள்ளது.

எனவே இந்த வைரசை கட்டுப்படுத்த மருத்துவ துறையினர் போராடி வருகின்றனர். இந்த வைரஸ் இந்தியாவில் பரவாமல் தடுப்பதற்காக பிரதமர் மோடி இன்று உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளும்படி அனைத்து மாநில அரசுகளும் உஷார்படுத்தப்பட்டு உள்ளன. தமிழகத்திலும் தடுப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்கும்படி சுகாதாரத்துறைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இதையடுத்து மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் இன்று சென்னை விமான நிலையத்தை ஆய்வு செய்தனர். பகல் 12.45 மணியளவில் தோகாவில் இருந்து வந்த விமான பயணிகள் பரிசோதிக்கப்படுவதை அவர்கள் பார்வையிட்டனர்.

பின்னர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது, புதிய வகை கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளன. கிட்டத்தட்ட கொரோனா கட்டுப்பாட்டு வளையத்துக்குள் சென்னை விமான நிலையம் கொண்டு வரப்பட்டுள்ளது.

வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகள் 48 மணி நேரத்துக்குள் கொரோனா பரிசோதனை செய்து நெகட்டிவ் சான்றிதழை பதிவேற்றம் செய்திருக்க வேண்டும். 2 தவணை தடுப்பூசி போட்டு இருந்தால் ஆர்.டி.பி.சி.ஆர். சோதனை தேவையில்லை. ஒரு தவணை மட்டும் போட்டு இருந்தால் கண்டிப்பாக சோதனைக்கு உட்படுத்த வேண்டும்.

பரிசோதனையில் அறிகுறி இல்லாவிட்டாலும் அவர்கள் ஒரு வாரம் கட்டாயம் வீட்டு தனிமையில் இருக்க வேண்டும். அந்த நாட்களில் தங்களை தாங்களே சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

காய்ச்சல், இருமல் போன்ற ஏதேனும் அறிகுறி இருந்தால் உடனே மருத்துவமனையை தொடர்பு கொள்ள வேண்டும். 8-வது நாள் மீண்டும் ஆர்.டி.பி.சி.ஆர். சோதனை செய்யப்படும். அதில் கொரோனா அறிகுறி இல்லாவிட்டால் மட்டுமே வெளியே நடமாட அனுமதிக்கப்படுவார்கள் என அவர் கூறினார்.

கொரோனா கட்டுப்பட்டுள்ளதால் அடுத்த மாதம் 11-ந்தேதி முதல் அனைத்து வெளிநாட்டு விமானங்களையும் இயக்க மத்திய அரசு திட்டமிட்டு இருந்தது. தற்போது வெளிநாடுகளில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளதால் வெளிநாட்டு விமான சேவையை தொடங்குவது பற்றி விமான நிலைய அதிகாரிகளுடன் அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் அதிகாரிகள் ஆலோசனை நடத்தினார்கள்.


இதில் வெளிநாட்டு விமானங்களை இயக்குவது தள்ளி போக வாய்ப்பு உள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *