இந்த ஆண்டிற்கான தமிழகத்தின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே உள்ள தச்சங்குறிச்சி கிராமத்தில் தொடங்கியுள்ளது.
போட்டியை புதுக்கோட்டை ஆட்சியர் கவிதா ராமு, சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் ஆகியோர் கலந்துகொண்டு தொடங்கி வைத்துள்ளனர். இப்போட்டியில் 700 காளைகள், 300 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றுள்ளனர். இவற்றுக்கிடையே 150க்கும் மேற்பட்ட போலீசார் தீவிர கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுமா நடக்காதா என்ற எதிர்பார்ப்பும் ஏக்கமும் தமிழகத்திலுள்ள ஜல்லிக்கட்டு காளைகள் வளர்ப்போர் மற்றும் ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் மத்தியில் மேலோங்கி இருந்த நிலையில், ஜல்லிக்கட்டு போட்டியை கட்டுப்பாடுகளுடன் நடத்த நேற்று முன்தினம் தமிழக அரசு அனுமதி அளித்தது. அந்தக் கட்டுப்பாடுகளின்படி ‘150 பார்வையாளர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும், 300 மாடுபிடி வீரர்களை மட்டுமே கலந்திருக்க வேண்டும், கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டதற்கான சான்றிதழ்களை சமர்ப்பித்த பின்னரே களத்திற்குள் அனுமதிக்கப்பட்ட வேண்டும்’ உள்ளிட்ட பல்வேறு விதிமுறைகளை தமிழக அரசு சார்பில் கூறப்பட்டிருந்தது.
இந்நிலையில் தமிழகத்திலேயே அதிக ஜல்லிக்கட்டு போட்டி நடக்கும் மாவட்டமான புதுக்கோட்டையில் இந்த ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி கந்தர்வகோட்டை அருகே உள்ள தச்சங்குறிசியில் தொடங்கியது. தமிழகத்தில் பல பகுதிகளில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்பட்டாலும், இந்த கிராமத்தில் நடக்கும் ஜல்லிக்கட்டு கூடுதல் ஸ்பெஷலானது. ஏனெனில் இங்கு அமைந்துள்ள புனித அன்னை அடைக்கல மேரி ஆலயத்தில் பொங்கலுக்கு மட்டுமன்றி புத்தாண்டு மற்றும் கிறிஸ்துமஸ் விழாவை முன்னிட்டும் ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்படுகிறது. அதனாலேயே இங்கு கடந்த 40 ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு போட்டி ஜனவரி 1-ஆம் தேதிதான் நடத்தப்பட்டு வந்தது. கொரோனா பரவல் காரணமாகவே இவ்வருடம் அரசின் விதிமுறைக்கு உட்பட்டு பொங்கலுக்கு முதல்நாள் ஜல்லிக்கட்டுப் போட்டி நடத்தப்பட்டு வருகின்றது.
இந்தப் போட்டியில் பங்கேற்க உள்ள 700 காளைகளுக்கான டோக்கன்கள் வழங்கப்பட்டு, அதை அழைத்து வருபவர்களுக்கும் உரிய பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வாடிவாசல் அனுமதிக்கப்பட்டு வருகிறது. மேலும் இதில் பங்கேற்க உள்ள 300 மாடுபிடி வீரர்களிடம் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டுதற்கான சான்றிதழ் பெறப்பட்டு அவர்களின் உடல் பரிசோதனை செய்யப்பட்டு சுழற்சி முறையில் வீரர்கள் களமிறக்கப்பட உள்ளனர். அதேபோல் 150 பார்வையாளர்கள் மட்டுமே அனுமதிக்க திட்டமிடப்பட்டு உள்ளூர் கிராம பொதுமக்கள் மட்டுமே தனிமனித இடைவெளியை கடைபிடிக்கின்றனர். அவர்களை கண்காணிக்க அனுமதிக்கும் நடவடிக்கைகளில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் வெளியூர் மக்கள் அதிக அளவில் வந்து விடாதபடியும் போட்டி நடைபெறும் இடத்தை சுற்றி தடுப்பு வேலிகள் அமைத்து போலீசார் தேவையற்ற நபர்களை திருப்பி அனுப்பி வருகின்றனர்.
இன்று காலை 7.45 மணிக்கு தொடங்கிய இந்த ஜல்லிக்கட்டு போட்டி, மதியம் ஒரு மணி வரையில் மட்டுமே நடத்த வருவாய்த் துறையினரால் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. முதலில் கோயில் காளை அவிழ்க்கப்பட்ட பின் படிப்படியாக ஒவ்வொரு காளையாக வாடிவாசலில் இருந்து களம் இறக்கப்படும். இந்த போட்டியை முன்னிட்டு புதுக்கோட்டை எஸ்பி நிஷா பார்த்திபன் கண்காணிப்பில் 150 போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதேபோல் வருவாய் துறையை சேர்ந்த 80 பேர் கால்நடை துறை சார்ந்த 50க்கும் மேற்பட்டோர் சுகாதாரத் துறையை சேர்ந்த 50 பணியாளர்கள் மற்றும் தீயணைப்பு துறை வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.போட்டியில் காயம் அடையும் வீரர்களுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி என்பதால் ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. விறுவிறுப்பும் அதே நேரத்தில் அசம்பாவிதங்கள் ஏதும் இன்றியும் நடக்க காவல் துறையினரும் வருவாய்த் துறையினரும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.