தமிழக சட்டப்பேரவைக் கூட்டம் டிசம்பர் 9ஆம் தேதி கூட்டப்படும் என சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் அடுத்தக் கூட்டத்தை, 2024-ஆம் ஆண்டு, டிசம்பர் 9-ஆம் நாள், திங்கட்கிழமை அன்று காலை 9.30 மணிக்கு, சென்னை தலைமைச் செயலகத்திலுள்ள சட்டமன்றப் பேரவை மண்டபத்தில் மாண்புமிகு பேரவைத் தலைவர் அப்பாவு அவர்கள் கூட்டியுள்ளார் என முதன்மைச் செயலர் கி.சீனிவாசன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
தமிழக சட்டசபை கூட்டத்தொடர் கடந்த ஜூன் மாதம் 20 ஆம் தேதி கூடியது. முதல் நாளில் மறைந்த எம்.எல்.ஏ.க்களுக்கு இரங்கல் குறிப்புகள் வாசிக்கப்பட்டு அவை நிகழ்ச்சிகள் ஒத்திவைக்கப்பட்டன. ஜூன் 21 ஆம் தேதியில் இருந்து அரசுத் துறை மானியக் கோரிக்கைகள் மீது எம்.எல்.ஏக்களின் விவாதம், அமைச்சர்களின் பதிலுரை, 55 மானியக் கோரிக்கை மீது வாக்கெடுப்பு ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன. ஜூன் 29 ஆம் தேதி வரை 9 நாட்கள் காலையிலும், மாலையிலும் சட்டப்பேரவை கூடியது. கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சம்பவம் தொடர்பாக சட்டசபையில் அதிமுகவினர் அமளி செய்ததை அடுத்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அதிமுக எம்.எல்.ஏக்கள் அனைவரும் கூட்டத்தொடரில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். பின்னர் அவை முன்னவரும், நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் தீர்மானம் ஒன்றைக் கொண்டு வந்தார். சட்டசபை கூட்டத்தொடர் முழுவதும் அ.தி.மு.க.வினர் நீக்கி வைக்கப்பட்து கூட்டத்தொடர் என்றில்லாமல், கூட்டம் என்று மாற்றிக் கொள்ளலாம் என்று முதலமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளதாகவும் கூறினார். அதைத்தொடர்ந்து, அந்த தீர்மானம் நிறைவேறியது.
இந்நிலையில், அடுத்த கூட்டத்தொடர் வரும் டிசம்பர் 9 ஆம் தேதி கூட உள்ளதாக சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார். இந்த கூட்டத்தொடரில் புதிய சட்ட மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட வாய்ப்பு உள்ளது. எத்தனை நாட்கள் கூட்டத்தொடர் நடைபெறும் என்பதை அலுவல் ஆய்வுக்குழு முடிவெடுத்து அறிவிக்கும்.
எதிர்க்கட்சிகள், திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு, பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து உள்ளதாக குற்றம்சாட்டி வரும் நிலையில், அது தொடர்பாக சட்டசபையில் குரல் எழுப்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே வரும் கூட்டத்தொடர் கடுமையான விவாதங்களுடன் காரசாரமாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.