• Mon. Dec 2nd, 2024

கச்சத்தீவு திருவிழாவிற்கு தமிழக மீனவர்களை அனுமதிக்க கோரி..,
வெளியுறவுத் துறை அமைச்சருக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்..!!

Byவிஷா

Feb 4, 2022

கச்சத்தீவு அந்தோணியார் திருவிழாவில் தமிழக மீனவர்கள் பங்கேற்க வழிவகை செய்திட இலங்கை அரசை வலியுறுத்திடக் கோரி, மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் அனுப்பியுள்ளார்.
கச்சத்தீவு அந்தோணியார் திருவிழாவில் கலந்துக்கொள்ள தமிழக மீனவர்களுக்கு அனுமதி அளிக்க வேண்டும் என மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார். தமிழக மீனவர்கள் கச்சத்தீவில் உள்ள புனித அந்தோணியார் தேவாலயத்தின் வருடாந்திரப் பெருவிழாவில் தடையின்றி பங்கேற்பதை உறுதி செய்யுமாறு இலங்கை அரசை வலியுறுத்திடக் கோரி, மத்திய வெளியுறவுத் துறை அமைச்சருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத்தில், கச்சத்தீவு புனித அந்தோணியார் தேவாலயத்தில், புனித அந்தோணியார் வருடாந்திரப் பெருவிழா ஒவ்வோர் ஆண்டும் பிப்ரவரி, மார்ச் மாதங்களில் கொண்டாடப்படுகிறது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இவ்விழாவில் பங்கேற்க விரும்பும் தமிழக மீனவ பக்தர்களின் பாதுகாப்பான பயணத்திற்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் தமிழக அரசு செய்து வருவதாகவும் பல்வேறு காரணங்களை முன்வைத்து இந்த ஆண்டு திருவிழாவில் தமிழக மீனவ பக்தர்கள் பங்கேற்க அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று இலங்கை அதிகாரிகள் தெரிவித்துள்ளது தமது கவனத்திற்கு வந்துள்ளதாகத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழக மீனவர்கள் மற்றும் பக்தர்கள் கச்சத்தீவு புனித அந்தோணியார் தேவாலயத்துடன் ஆன்மீக மற்றும் உணர்வுபூர்வமான தொடர்பை பல ஆண்டுகளாகக் கொண்டுள்ளனர் என்றும், அவர் தெரிவித்துள்ளார்.
கச்சத்தீவு திருவிழாவில் பங்கேற்க இலங்கை அதிகாரிகளால் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. தமிழக மீனவர்களிடையே பெருத்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ள தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஒவ்வொரு ஆண்டும் பாரம்பரியமாக புனித அந்தோணியார் தேவாலயத்தின் வருடாந்திரப் பெருவிழாவில் தமிழக மீனவர்கள் தடையின்றி பங்கேற்பதை உறுதி செய்யுமாறு இலங்கை அரசை வலியுறுத்திட வேண்டுமென்று ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சரைக் கேட்டுக் கொண்டுள்ளதோடு, இம்முயற்சி இரு நாட்டு மக்களிடையே நல்லுறவைப் பேணுவதை உறுதி செய்யும் என்று தான் நம்புவதாகவும் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். இந்த கடிதத்தை நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர். பாலு மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரை நேரில் சந்தித்து வழங்கினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *