• Wed. Dec 11th, 2024

இல்லத்தரசிகளை ஏமாற்றிய தமிழக பட்ஜெட்..!

தமிழக நிதி நிலை அறிக்கையில் மகளிர் உரிமை தொகை ரூ. 1000 அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பட்ஜெட்டில் அறிவிப்பு இடம்பெறாதது பெண்களை ஏமாற்றம் அடைய செய்துள்ளது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு பதவியேற்று 10 மாதங்கள் முடிவடைந்துள்ள நிலையில் தனது முதல் நிதி நிலை அறிக்கையை நிதித்துறை அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் ராஜன் தாக்கல் செய்துள்ளார். இந்த நிதி நிலை அறிக்கையில் பல்வேறு முக்கிய அறிவிப்புகள் இடம் பெற்று இருந்தது.
குறிப்பாக ஓய்வுபெற்ற அரசு ஊழியர்களுக்கான ஓய்வூதிய பலன்களை வழங்க ரூ.19,000 கோடி ஒதுக்கீடு, வட்டியில்லா பயிர்க்கடன் திட்டத்திற்கு ரூ.200 கோடி ஒதுக்கீடு, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறைக்கு ரூ.17,901 கோடி நிதி ஒதுக்கீடு, மகளிர் இலவச பேருந்து பயண திட்டத்திற்கு ரூ.1,520 கோடி நிதி ஒதுக்கீடு என பல்வேறு அறிவிப்புகள் இடம்பெற்று இருந்தது. ஆனால் திமுக தேர்தல் வாக்குறுதியாக கொடுக்கப்பட்ட ஒரு சில வாக்குறுதிகள் இந்த நிதி நிலை அறிக்கையில் இடம்பெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அதற்கான அறிவிப்பு இந்த நிதிநிலை அறிக்கையில் இடம்பெறவில்லை
திமுக தேர்தல் அறிக்கையில் முக்கிய அம்சமான மகளிர் உரிமை தொகை ரூ. 1000க்கான அறிவிப்பு, மாதம் ஒரு முறை மின் கட்டணம் என்பன ஒரு சில அறிவிப்புகளை பொதுமக்கள் எதிர்பார்த்து இருந்தனர். ஆனால் அதற்கான அறிவிப்பு இந்த பட்ஜெட்டில் இடம்பெறவில்லை. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிரசாரத்தில் கூட மகளிர் உரிமை தொகை தொடர்பாக எதிர்கட்சி கேள்வி கேட்கும் நிலை ஏற்பட்டது. இதனையடுத்து அதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என கூறப்பட்டிருந்தது. ஆனால் தற்போது நிதி சுமை உள்ள நிலையில் அந்த திட்டம் தற்போது அறிவிக்கவில்லை. இதற்கான காரணத்தை நிதித்துறை அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் ராஜன் சட்டசபையில் கூறியுள்ளார். 1000 ரூபாய் மகளிர்க்கான உரிமைத்தொகை திட்டத்தை செயல்படுத்த பயனாளிகளை கண்டறிந்து செயல்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக கூறினார். நிதி நிலைமை சரி செய்த பின் நிச்சயம் இந்த திட்டம் செயல்படுத்தப்படும் என உறுதியளிப்பதாகவும் தெரிவித்தார்.
திமுக அரசு தேர்தல் வாக்குறுதிகளான ஆவின் பால் விலை குறப்பு, பேருந்தில் பெண்களுக்கு இலவச பயணம் போன்ற பல்வேறு அறிவிப்புகள் நிறைவேற்றப்பட்டுள்ளதாக கூறிய பி.டி.ஆர் பழனிவேல்ராஜன் மேலும் முக்கிய அறிவிப்பான மகளிர் உரிமை தொகை வழங்கும் அறிவிப்பிற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறினார். கடந்த ஆட்சி விட்டு சென்ற நிதி சுமை காரணத்தால் முதலாம் நிதி ஆண்டில் இந்த திட்டம் செய்ல்படுத்த முடியாத நிலை ஏற்பட்டதாக கூறினார். இருந்த போதும் இந்த திட்டம் சரியான பயனாளிகளை சென்றடையும் வகையில் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளதாக கூறினார். மேலும் தமிழக நிதி முன்னேற்றம் அடைய சிறந்த வல்லுநர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தவர் விரைவில் நிதிசுமை சரியானதும் திட்டம் செயல்படுத்தப்படும் என கூறினார்.