சென்னை அடுத்த பல்லாவரம் கச்சேரி மலை பகுதியில் தமிழக வெற்றி கழகம் சார்பில் பல்லாவரம் சட்டமன்ற தொகுதி வெற்றி விழா சிறப்பாக நடைபெற்றது.

த.வெ.க. பிரமுகர் ஜெயகிருஷ்ணன் தலைமையில் தனியார் பள்ளி அரங்கில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், பல்லாவரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் காமாட்சி ஜெயகிருஷ்ணன் மற்றும் செங்கல்பட்டு வடக்கு மாவட்ட செயலாளர் மின்னல் குமார் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய ஜெயகிருஷ்ணன், மாநிலத்தில் நிலவும் லஞ்சம், போதை, குற்றச்செயல்கள் போன்றவற்றுக்கு மாற்றம் தேவை என்ற மக்களின் எதிர்பார்ப்பை த.வெ.க. தலைவர் விஜய் நிறைவேற்றுவார் என நம்பிக்கை தெரிவித்தார்.

அதனை தொடர்ந்து உரையாற்றிய சட்டமன்ற உறுப்பினர் காமாட்சி, பல்லாவரம் தொகுதியை தூய்மை மற்றும் சுகாதாரத்தில் முன்னோடி தொகுதியாக மாற்ற உறுதியளித்தார். மேலும், மக்களின் குறைகளை நேர்மையாக தீர்க்கும் பணியில் தொடர்ந்து ஈடுபடுவேன் என்றும் தெரிவித்தார்.
நிகழ்ச்சியின் முக்கிய அம்சமாக, 10ம் வகுப்பு மற்றும் +2 தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு 5 ஆயிரம் ரூபாய் வரை ஊக்கத்தொகையும் பதக்கங்களும் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டனர்.

மேலும், 2026 தேர்தலில் சிறப்பாக பணியாற்றிய த.வெ.க. நிர்வாகிகள் மற்றும் மகளிரணி உறுப்பினர்களுக்கும் விருதுகள் வழங்கப்பட்டன.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட, பகுதி, வார்டு நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் மகளிரணி உறுப்பினர்கள் உட்பட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.




