• Thu. Jun 18th, 2026
WhatsAppImage2026-06-04at220632
previous arrow
next arrow
Read Now

கோவையில் அடிப்படை வசதிகள் கோரி திடீர் சாலை மறியல்..,

BySeenu

Jun 18, 2026

கோவை, புலியகுளம் பகுதியில் உள்ள மீனா எஸ்டேட் அருகே, பாலசுப்ரமணியம் நகர் மக்களுக்குத் தேவையான அடிப்படை மற்றும் பொதுக் கழிப்பிட வசதிகளைச் செய்து தரத் தவறிய கோவை மாநகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து, நூற்றுக் கணக்கான பொதுமக்கள் திடீரெனச் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

கோவை, புலியகுளம் மற்றும் சவுரிபாளையம் உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் நீண்ட நாட்களாகவே போதிய உள்கட்டமைப்பு மற்றும் பொதுக் கழிப்பிட வசதிகள் இன்றி பொதுமக்கள், குறிப்பாகப் பெண்கள் மற்றும் குழந்தைகள் சொல்லொணாத் துயரத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

இதுகுறித்து கோவை மாநகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை முறையான மனுக்கள் அளித்தும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.

​மாநகராட்சி நிர்வாகத்தின் இந்தத் தொடர் அலட்சியப் போக்கால் ஆத்திரம் அடைந்த பாலசுப்ரமணியம் நகர் பகுதி மக்கள், இன்று இரவு திரண்டு வந்து புலியகுளம் பிரதான சாலையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் குதித்தனர்.

இதனால் அந்தப் பகுதியில் ஒட்டுமொத்தப் போக்குவரத்தும் ஸ்தம்பித்ததுடன், வாகனங்கள் நீண்ட தூரத்திற்கு அணிவகுத்து நின்றன. சம்பவ இடத்திற்கு அதிவிரைவாக வந்த போலீசார், பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்திப் போராட்டத்தைக் கைவிடுமாறு வலியுறுத்தினர்.

அப்போது, “மாநகராட்சி நிர்வாகம் செய்யத் தவறிய தவறுகளுக்கு எங்களை ஏன் தடுக்கிறீர்கள் ?” என்று கூறி, பாதுகாப்புப் பணியில் இருந்த காவல் துறையினருடன் பொதுமக்கள் காரசாரமான வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அந்த இடமே போர்க்களமாக மாறியது.

​பொதுமக்களின் இந்தத் திடீர் எழுச்சிப் போராட்டத்தால் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் சூழல் உருவானதை அடுத்து, மாநகராட்சி உயர் அதிகாரிகளுக்குக் காவல்துறை தரப்பில் இருந்து அவசரத் தகவல் அனுப்பப்பட்டது. உடனே விரைந்து வந்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள், பாலசுப்ரமணியம் நகர் பகுதியில் போர்க்கால அடிப்படையில் புதிய கழிப்பிட வசதிகள் மற்றும் இதர உள்கட்டமைப்பு பணிகளைத் தொடங்கித் தருவதாகப் பொதுமக்களிடம் உறுதியளித்தனர்.

அதிகாரிகளின் இந்தச் பேச்சுவார்த்தையை ஏற்றுப் பொதுமக்கள் தற்காலிகமாகப் போராட்டத்தைக் கைவிட்டுக் கலைந்து சென்றனர்.

கோவை மாநகராட்சியின் உள்கட்டமைப்புத் தோல்வியை அம்பலப்படுத்தும் வகையில், மக்கள் திரண்டு வந்து நடத்திய இந்தச் சாலை மறியல் போராட்டம் கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.