• Fri. May 29th, 2026
WhatsAppImage2026-05-28at214307
previous arrow
next arrow
Read Now

உசிலம்பட்டியில் பொதுமக்கள் திடீர் சாலை மறியல்

ByP.Thangapandi

Apr 10, 2024

உசிலம்பட்டி நகராட்சிக்குட்பட்ட பகுதியில் முறையான சாலை, கழிவுநீர் வடிகால் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து கொடுக்காத நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சிக்குட்பட்ட 5வது வார்டு இருளப்பத்தேவர் தெருவில் சுமார் 100க்கும் அதிகமான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

இந்த பகுதியில் உள்ள சாலைகள் சிதிலமடைந்த நிலையில் குண்டும் குழியுமாக காணப்படுகிறது., இந்த பகுதியில் சாலை வசதி, கழிவுநீர் வடிகால் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தர கோரி கடந்த இரண்டு ஆண்டுகளாக பலமுறை நகராட்சி நிர்வாகத்திடம் முறையிட்டும் எந்த நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் மதுரை-தேனி தேசிய நெடுஞ்சாலையில் இன்று திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தகவலறிந்து விரைந்து வந்த உசிலம்பட்டி நகர் காவல் நிலைய போலிசார் மற்றும் நகராட்சி அலுவலர்கள் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி விரைவில் அடிப்படை வசதிகளை செய்து கொடுப்பதாக உறுதி அளித்ததை அடுத்து சாலை மறியல் கைவிடப்பட்டது.

இந்த சாலை மறியலால் மதுரை-தேனி தேசிய நெடுஞ்சாலையில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.