சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் கண்காணிப்பு அலுவலர் மற்றும் பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக தலைவர் / மேலாண் இயக்குநர் எஸ்.சிவ சண்முகராஜா தலைமையில் வடகிழக்கு பருவமழை குறித்த முன்னேற்பாடு பணிகள் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
சேலம் மாவட்டத்தில் வடகிழக்கு பருவ மழையின் போது பாதிக்கப்படக்கூடும் என அடையாளம் காணப்பட்டுள்ள 23 இடங்களில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடியாக தொடங்க வேண்டும். மேலும், தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் புகும்போது எந்த இடத்தில் நிவாரண முகாம்கள் அமைப்பது, நிவாரண முகாம்களில் தங்க வரும் பொதுமக்களுக்கு தேவையான பால், ரொட்டி உள்ளிட்ட பொருட்களை தயார் செய்வது என முன்கூட்டியே திட்டமிட்டு செயல்படுத்த வேண்டும்.
வடகிழக்கு பருவ மழையின் போது பொது மக்களுக்கு உதவுவதற்காக சேலம் மாவட்டத்தில் பேரிடர் மேலாண்மை பயிற்சி பெற்ற 5482 அரசு அலுவலர்கள் தயார் நிலையில் இருக்கின்றனர். காவல்துறை, வருவாய் துறை, ஊரக வளர்ச்சித் துறை, மருத்துவத்துறை உள்ளிட்ட அனைத்து துறையைச் சேர்ந்த அலுவலர்களும் வடகிழக்கு பருவ மழையின் போது ஒன்றிணைந்து செயல்பட்டு பொதுமக்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வடகிழக்கு பருவமழை நடப்பாண்டில் வழக்கத்தை விட கூடுதலாக இருக்கும் என வானியல் மையம் தெரிவித்துள்ளது. அதற்கேற்ப துறைவாரியாக தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என சேலம் மாவட்ட கண்காணிப்பாளர் சிவ சண்முகராஜா கேட்டுக்கொண்டார். தொடர்ந்து சேலம் ஆனந்தா பாலம் அருகே திருமணிமுத்தாறு மழைநீர் வடிகால் அமைப்பினையும், பள்ளப்பட்டி ஏரியையும் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வின் போது மாவட்ட ஆட்சியர் கார்மேகம், மாநகர காவல் ஆணையாளர் நஜ்மல் ஹோதா, மாநகராட்சி ஆணையாளர் கிறிஸ்துராஜ் ஆகியோர் உடன் இருந்தனர்.