நீட்.. உயிர்காக்கும் மருத்துவ படிப்பிற்க்கானது என்பதைத் தாண்டி தமிழகத்தை பொறுத்தவரை மாணவர்களின் உயிரைக் காவுவாங்கும் ஒன்றாகிவிட்டது.
நீட் தேர்வுக்கு பயந்து தற்கொலை, நீட் தேர்வு சரியாக செய்யவில்லை என தற்கொலை, நீட் தேர்வு முடிவால் தற்கொலை, இரண்டு மூன்று முறை தேர்வு எழுதி பாஸ் ஆகவில்லை, இரண்டு மூன்று முறை எழுதி பாஸ் செய்தும் போதிய மதிப்பெண் இல்லை என தற்கொலை.. என நீட் தேர்வால் நிகழும் தற்கொலைக்கு வெவ்வேறு காரணங்கள்.
நடப்பாண்டில் மட்டும் நீட் தேர்வு தமிழகத்தில் 18 நகரங்களில் 224 தேர்வு மையங்களில் நடைபெற்றது. இதில் 1 லட்சத்து 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவமாணவிகள் தேர்வு எழுதினர்.
இதில் இந்தாண்டு மட்டும், நீட் தேர்வு தோல்வி பயத்தால் சேலம் மாவட்டம் கூழையூரை சேர்ந்த தனுஷ், அரியலூர் மாவட்டம் துளாரங்குறிச்சியை சேர்ந்த கனிமொழி,வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த செளந்தர்யா தற்கொலை செய்துகொண்டனர்.கோவை, கிணத்துக்கடவு அருகே முதூரில் கீர்த்திவாசன் என்ற மாணவர் நீட் தேர்வில் தோற்றுவிடுவோமோ என்ற பயத்தில் தற்கொலை.
நீட் தேர்வு முடிவுக்கு பின்னர் மாணவர்களின் தற்கொலை முடிவில்லாமல் தொடர்ந்துகொண்டே போகிறது. அப்படி அனிதா தூவங்கி இன்று சென்னை சுஜித் வரை தேர்வில்
தோல்வி என்பதைத் தாண்டி, மதிப்பெண் குறைவாலும், மருத்துவ நுழைவு சீட் கிடைக்காதா காரணத்தாலும் நிகழும் உயிரிழப்பு கொஞ்சம் நஞ்சம் இல்லை.
எத்தனை முறை வேண்டுமானாலும் ‘நீட்’ எழுதலாம் என்பதால் இரண்டாம் அல்லது மூன்றாம் முயற்சியில் தேர்வாகும் மாணவர்கள்கூட எளிதில் மருத்துவம் படிக்க முடிகிறது. அவர்களுடன் முதல் முறையாக தேர்வை எழுதும் மாணவர்களும் போட்டியிட வேண்டும்.
பள்ளிக்கல்வி முடித்தும் ஓரிரு ஆண்டுகள் பயிற்சி வகுப்புக்கு செல்ல வசதியும், வாய்ப்பும் இல்லாத மாணவர்கள், மேல்நிலை வகுப்பு பயிலும்போதே ‘நீட்’ பயிற்சி வகுப்புக்கு செல்ல வசதி இல்லாத கிராமப்புற மாணவர்கள் மற்றும் நகர்ப்புற ஏழை மாணவர்கள் உள்ளிட்டோர், அதற்கான வாய்ப்புகளை பெற முடிந்த, வசதிபடைத்த பின்புலத்தில் இருந்து வரும் மாணவர்களுடன் போட்டியிட வேண்டிய சூழல் ‘நீட்’ தேர்வால் நிலவுகிறது.
இப்படி பொருளாதார ரீதியாகவும், மாணவர்களின் வசிப்பிட ரீதியாகவும், தேர்வுக்கு முன்னேற்பாடு செய்வதற்கான கால அளவிலும் சமமற்ற போட்டி நிலவுவதாகவும், அந்த சமமற்ற போட்டியே மாணவர்களின் மன அழுத்தத்துக்கு காரணமானவதாகவும் இருக்கிறது.
படிக்கும் படிப்பு ஒருவருக்கு தன்னம்பிக்கையும், மன உறுதியையும் கொடுக்க வேண்டும். மாறாக அவரைகளை நிலைகுலைய வைக்கக் கூடாது.