புதிய வழிகாட்டு நெறிமுறைகளை உயர்கல்வி நிறுவனங்களுக்கு பல்கலைக்கழக மானியக் குழு (யு. ஜி. சி) அறிவித்துள்ளது. அதில் கூறியிருப்பதாவது.
இந்த வழிகாட்டு நெறி முறைகளின் நோக்கம் உயர்கல்வி நிலையங்களில் மாணவர்களிடையே விளையாட்டு செயல்பாடுகளையும், உடற்பயிற்சியையும் ஊக்குவிப்பதே ஆகும். மேலும் மனித வளமும், விளையாட்டுக்கான உள்கட்டமைப்புகளும் இருந்தபோதிலும், உயர்கல்வி நிறுவனங்களில் விளையாட்டு கட்டாயம் இல்லை என்பது முரண்பாடாக உள்ளது.
இருப்பினும் உயர்கல்வி நிறுவனங்களில் ஒவ்வொரு மாணவர்களிடமும் இருந்து விளையாட்டுக்காக கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஆனாலும் அனைத்து மாணவர்களில் 1 அல்லது 2% மாணவர்கள் மட்டுமே விளையாட்டு சாதனங்களை பயன்படுத்தி வருகின்றனர். இதனைத் தொடர்ந்து மாணவர்களுக்கு ஆரோக்கியமான உடல் அமைப்பை உருவாக்க போதிய உடற்பயிற்சி அவசியம் என்பதால் உடற்பயிற்சி மற்றும் விளையாட்டுகளில் ஈடுபடுவதை உறுதி செய்ய வேண்டும்.
இது மட்டுமின்றி மாணவர்கள் மன அழுத்தமின்றி செயல்படுவது கட்டாயம். அதனால் கிராமப்புற மாணவ, மாணவிகள், பல்வேறு கலாச்சார பின்னணி கொண்டவர்கள் மன உறுதியை அதிகரிக்க தேவையான நடவடிக்கைகளை எடுத்து நேர்மறை எண்ணங்களை உருவாக்கி கற்றல், கற்பித்தல் போன்ற தேவையான சூழ்நிலையை உருவாக்க வேண்டும். இதனைத் தொடர்ந்து வேலைவாய்ப்பு முகாம்கள், கோடைகால பயிற்சி வகுப்புகள், பாடத் திட்டம் சாராத செயல்பாடுகள், கல்வி சுற்றுலா போன்றவற்றை நடத்தலாம் என தெரிவித்திருந்தது.