ஈரானில் சிக்கித் தவித்த இந்திய மருத்துவ மாணவர்கள் தாயகம் திரும்புகின்றனர். இதில் யெரவான் வழியாக இன்று 110 மாணவர்கள் டெல்லிக்கு வருகின்றனர்.

காஷ்மீரைச் சேர்ந்த 1500 மாணவர்கள் உட்பட 4000 இந்தியர்கள் ஈரானில் சிக்கித் தவித்து வருகின்றனர். ஈரானில் நிலவும் அசாதாரண சூழ்நிலை காரணமாக அங்கிருந்து 110 இந்திய மருத்துவ மாணவர்கள் அர்மீனியாவின் தலைநகரான யெரவானுக்கு பத்திரமாக அழைத்து வரப்பட்டுள்ளனர். அங்கிருந்து இன்று விமானம் மூலம் அவர்கள் டெல்லிக்கு அழைத்து வரப்படுவார்கள். ஈரானின் வான்வெளி மூடப்பட்டுள்ளதால், டெஹ்ரானில் இருந்து 148 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கோம் நகருக்கு மாணவர்களை பேருந்துகள் மூலம் அழைத்துச் சென்று, அங்கிருந்து எல்லையைக் கடந்து அர்மீனியாவுக்கு அழைத்து வரப்பட்டனர்.
ஈரானில் தற்போது சுமார் 4000 இந்தியர்கள் உள்ளதாகவும், அவர்களில் 1500 பேர் மாணவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாணவர்களில் பெரும்பாலானோர் காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். தனிப்பட்ட முறையில் டெஹ்ரானை விட்டு வெளியேற முடிந்தால் அவ்வாறு செய்யுமாறு இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது. மேலும், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் வழியாகவும் இந்தியர்களை தாயகம் அழைத்து வர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.