• Sun. Sep 20th, 2026
WhatsAppImage2026-09-17at2324521
previous arrow
next arrow
Read Now

சாய்ராம் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் மாணவர்கள் அவதி? சபாநாயகர் உரையும் சர்ச்சையும்..,

ByPrabhu Sekar

Sep 20, 2026

சென்னையை அடுத்த மேற்கு தாம்பரத்தில் உள்ள சாய்ராம் பொறியியல் கல்லூரியின் 27-வது பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது. கல்லூரியின் முதன்மை செயல் அலுவலர் சாய் பிரகாஷ் லியோமுத்து தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில், தமிழ்நாடு சட்டமன்ற சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார்.

விழாவில் உரையாற்றிய ஜே.சி.டி. பிரபாகர், நாட்டில் படிப்புக்கேற்ற வேலை மற்றும் திறமைக்கேற்ற ஊதியம் இன்னும் முழுமையாக கிடைக்கும் நிலை உருவாகவில்லை என்று தெரிவித்தார். மாணவர்கள் மதிப்பெண்களை மட்டுமே வெற்றியின் அளவுகோலாக கருதாமல், தங்களின் தனித்திறமைகளை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்றும், நாட்டின் ஜனநாயகம் மற்றும் மதச்சார்பின்மையை இரு கண்களாக பாதுகாக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

மேலும், பெற்றோர்களின் தியாகத்தை மதித்து வாழ வேண்டும், பட்டம் பெற்ற பிறகும் தொடர்ந்து கற்றுக்கொண்டு சமூகப் பொறுப்புள்ள குடிமக்களாக உருவாக வேண்டும் என மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

இந்நிலையில், பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்ட மாணவர்கள் பல மணி நேரம் அமர்ந்து இருந்தபோதும் போதிய குளிர்சாதன மற்றும் காற்றோட்ட வசதிகள் ஏற்பாடு செய்யப்படவில்லை என புகார்கள் எழுந்துள்ளன. பட்டமளிப்பு ஆடைகளை அணிந்திருந்த மாணவர்கள் கை விசிறிகளை பயன்படுத்தி வெப்பத்தை சமாளிக்க முயன்ற காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.

அதேபோல், விழாவில் சிறப்பு பதக்கங்கள் மற்றும் விருதுகள் வழங்கும் நிகழ்வின்போது சில மாணவர்களுக்கு மட்டுமே பதக்கங்கள் வழங்கப்பட்டதாகவும், அதன் பின்னர் சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் செய்தியாளர்களை சந்தித்து விட்டு நிகழ்விடத்திலிருந்து புறப்பட்டுச் சென்றதாகவும் கூறப்படுகிறது.

மாணவர்கள் அவதிப்பட்டதாக கூறப்படும் காட்சிகளும், நிகழ்ச்சி ஏற்பாடுகள் குறித்த விமர்சனங்களும் தற்போது சமூக வலைதளங்களில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன. எனினும், இந்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக கல்லூரி நிர்வாகத்தின் விளக்கம் இதுவரை வெளியாகவில்லை.