தேனி மாவட்டம், போடி அருகே உள்ள குரங்கனி மற்றும் புலிக்குத்தி கிராமத்தை சேர்ந்த 17 வயதுடைய 2 சிறுவர்கள் குற்றவழக்கில் போடி அனைத்து மகளிர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். இருவரும் மதுரை சிறுவர்கள் கூர்நோக்கு பள்ளியில் அடைக்கப்பட்டு இருந்தனர். இந்நிலையில் இரண்டு சிறுவர்களையும் தேனி கோர்ட்டில் ஆஜர்படுத்துவதற்காக 3 போலீசார் மதுரையில் இருந்து பஸ்சில் அழைத்து வந்தனர். கோர்ட்டில் ஆஜர்படுத்திய பின்னர் மாலை மீண்டும் மதுரைக்கு பஸ்சில் வந்து கொண்டிருந்தனர். ஆண்டிப்பட்டி பஸ் நிலையம் வந்த போது போலீசார் கவனத்தை திசை திருப்பிவிட்டு இரண்டு சிறுவர்களில் ஒருவன் கண் இமைக்கும் நேரத்தில் பஸ்சில் இருந்து இறங்கி தப்பி ஓடிவிட்டார். இதனைக்கண்டு அதிர்ச்சி அடைந்த போலீசார் அவனை விரட்டி பிடிக்க முயன்றனர். ஆனால் அந்த சிறுவன் தப்பி ஓடிவிட்டான். இதனையடுத்து சிறுவர்களை அழைத்து வந்த போலீசார் ஆண்டிப்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தப்பி ஓடிய சிறுவனை தேடி வருகின்றனர். ஓடும் பஸ்சில் இருந்து கைதி சிறுவன் தப்பி ஓடிய சம்பவம் ஆண்டிப்பட்டியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது-.