தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள ஜம்புலிபுத்தூர் கதலி நரசிங்கப்பெருமாள் கோவில் இரண்டாம் நாள் தேரோட்டம் மாலை நடைபெற்றது .இதில் நூற்றுக்கணக்கான பெண்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து வந்தனர். தேர் நிலையை அடைந்ததால் பக்தர்கள் பக்தி பரவசத்துடன் ஆரவாரமாக கொண்டாடினார்கள். அதனை முன்னிட்டு தேர் நிலையை அடைந்ததும், பக்தர்கள் வாழைப்பழம், பருத்திபஞ்சு ,நாணயங்கள் உள்ளிட்டவைகளை வாரி இறைத்து தங்கள் மகிழ்ச்சியை தெரிவித்துக் கொண்டனர். அதனை தொடர்ந்து தேரில் அமர்ந்திருக்கும் ஸ்ரீதேவி பூதேவி சமேத கதலி நரசிங்கப் பெருமாள் உற்சவர்களுக்கு தீபாராதனை காட்டப்பட்டது .உற்சவர்கள் தேரில் இருந்து இறங்கி பல்லக்கில் அமர்ந்து , தேர் வழித்தடம் பார்க்கும் நிகழ்ச்சி நடைபெற்றது .இதனையடுத்து உற்சவர்கள் பல்லக்கில் ஊரை பவனி வந்து கோவிலில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த புஷ்ப மண்டபத்தில் எழுந்தருளினர் .அங்கு வழக்கம்போல் பூஜைகள் செய்யப்பட்டு ஸ்ரீ.ரங்கபுரம் கிராம மக்கள் சார்பாக மண்டகப்படி நிகழ்ச்சி நடந்து ,அதனை அடுத்து 24 மனை தெலுங்கு செட்டியார்கள் மண்டகப்படி நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து நாளை சுவாமி புஷ்ப பல்லக்கில் பவனி வரும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது .