• Thu. Mar 28th, 2024

தேனி: ‘கும்பிடு’ போடுங்க;
ஓட்டு அள்ளலாம்…!

“யாரும் சோம்பேறித்தனமாக இருக்க வேண்டாம்; வேட்பாளர்கள் தினமும் காலையில் கட்டாயம் வார்டு பக்கம் ‘ரவுண்ட்ஸ்’ போங்க; வீடு…வீடாகச் சென்று விசாரித்தாலே போதும், நாம் உள்ளாட்சி தேர்தலில், 100 சதவீதம் வெற்றி வாய்ப்பை பெறலாம்”, என தேனியில் நடந்த வேட்பாளர்கள் அறிமுக கூட்டத்தில், தி.மு.க., வடக்கு மாவட்ட பொறுப்பாளர் தங்க தமிழ்செல்வன் பேசினார்.

நகர்புற உள்ளாட்சி தேர்தல் வரும் 19ம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி, தேனி அல்லிநகரம் நகராட்சிக்குட்பட்ட 33 வார்டு கவுன்சிலர் பதவிக்கான வேட்புமனு தாக்கல் நிறைவடைந்துள்ளது. தி.மு.க., சார்பில் அதன் கூட்டணி கட்சிகளும் களத்தில் குதித்துள்ளன. 33 வார்டுகளில் போட்டியிடும் தி.மு.க.,- காங்., – வி.சி.க., உள்ளிட்ட வேட்பாளர்கள் அறிமுக கூட்டம், தேனி என்.ஆர்.டி., மண்டபத்தில் நேற்று (பிப்.,6) இரவு 7 மணிக்கு துவங்கியது. இந்த கூட்டத்திற்கு தலைமை வகித்து, தி.மு.க., வடக்கு மாவட்ட பொறுப்பாளர் தங்கதமிழ்செல்வன் பேசியதாவது; மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தி.மு.க., உள்ளிட்ட கூட்டணி கட்சி வேட்பாளர்கள் இங்கு கூடியுள்ளோம். அனைவரின் முகத்திலும் புன்னகை தெரிகிறது. நாம் எப்படியும் வெற்றி பெற்று விடுவோமென்று. அதுதான் கூடாது. இதற்காக நாம் கடுமையாக உழைக்க வேண்டும். தேர்தல் நெருங்கிவிட்டது. இன்னும் சில நாட்களே இருப்பதால், யாரும் சோம்பேறித்தனமாக இருக்க வேண்டாம். வேட்பாளர்கள் தினமும் காலையில் ‘சுறுசுறுப்பு’டன் எழுந்து வார்டு பக்கம் ‘ரவுண்ட்ஸ்’ போங்க…பிறகு வீடு…வீடாகச் சென்று விசாரிங்க…இதை செய்தாலே போதும் நாம் உள்ளாட்சி தேர்தலில் 100 சதவீதம் வெற்றி வாய்ப்பை பெறமுடியும். இதற்கு ‘பூத் கமிட்டி’ ஒத்துழைப்பு மிக அவசியம். ‘ரவுண்ட்ஸ்’ போகும் முன்பு அந்தந்த வார்டு பொறுப்பாளர்களிடம் அலைபேசி மூலமாக தொடர்பு கொண்டு பேசுங்க. இது அவர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தும். சொல்லாமல் போனால் ‘சடவு’ ஏற்படும். வாக்காளர்களை பார்த்து அடிக்கடி ‘கும்பிடு’ போடுங்க. அப்போது தான் நம்மீது அவர்களுக்கு மரியாதை ஏற்படும். தமிழகத்தில் தி.மு.க., வின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. உள்ளாட்சி தேர்தலிலும்….நல்லாட்சி அமைப்போம்” என பேசி முடித்தார். பின்னர் வேட்பாளர்கள் பெயர் ‘மைக்கில்’ ஒலிக்க ஒவ்வொருவராக எழுந்து, மேடையருகே வந்து ‘இருகரம் கூப்பி’ தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டனர். பெரியகுளம் எம்.எல்.ஏ., சரவணகுமார், தேனி நகர பொறுப்பாளர் சூர்யா பாலமுருகன், மாவட்ட காங்., தலைவர் முருகேசன், தி.மு.க., மாவட்ட குழு உறுப்பினர் எம்.வி.கே.ஜீவா, சி.பி.ஐ., மாநில குழு உறுப்பினர் பெத்தாட்சி ஆசாத், சி.பி.எம்., தாலுகா செயலாளர் தர்மர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *