• Sat. Apr 20th, 2024

ஸ்டாலின் எந்த சாதனையும் செய்யவில்லை..! ஆலோசனைக் கூட்டத்தில் ராஜன்செல்லப்பா காரசாரம்..,

மதுரையில் அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டத்திம் வண்டியூர் பகுதி நடைபெற்றது. இக் கூட்டத்திற்கு தலைமை தாங்கிய மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளர், சட்டமன்ற உறுப்பினர் ராஜன்செல்லப்பா கலந்து கொண்டார். அவர் தொண்டர்கள் மத்தியில் மைக்கை பிடித்தது மே..,

அதிமுக இரண்டு சதவீதம் வாக்கு வித்தியாசத்தில் தான் வெற்றி வாய்ப்பை இழந்துள்ளது.

தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 234 தொகுதிகளில் 40 தொகுதிகளில் 5000 ஓட்டுகள் வித்தியாசத்தில் தான் தோல்வியடைந்தோம்.

சட்டமன்ற தேர்தலில் நாம் இன்னும் கொஞ்சம் உழைத்திருந்தால் எடப்பாடி பழனிச்சாமி தொடர்ந்து முதல்வராக இருந்திருப்பார்.

பாப்பாபட்டி கிராம சபை கூட்டம் செயற்கையாக ஏற்படுத்தப்பட்டது. கிராமசபைக்கூட்டத்தில் 202 சாதனைகளை செய்ததாக முதல்வர் கூறுகிறார்.

அதில் பூஜ்யத்தை எடுத்துவிட்டால் 22 சாதனைகள் கூட திமுக செய்யவில்லை.

முதல்வர் செய்த சாதனை ஏதாவது நமக்கு வந்து சேர்ந்து இருக்கிறதா?

ஒரே ஒரு சாதனை பெண்களுக்கு பேருந்தில் இலவசம் என கூறி ஒரு சாதனையை செய்துள்ளார்.

நின்று நின்று போகக்கூடிய, பத்தடிக்கு ஒரு முறை நிற்கக்கூடிய பேருந்தில் மகளிருக்கு இலவசம் என்று அந்தச் சாதனையை தான் முதல்வர் செய்துள்ளார். வேகமாக போகக்கூடிய பேருந்தில் மகளிர் இலவசமாக பயணிக்க முடியுமா? 4ரூபாய் பேருந்தில் மட்டுமே இலவசம் கொடுத்துள்ளார்.

திமுக அரசு எந்த திட்டத்தையும் நிறைவேற்றவில்லை. அவர்கள் தான் திட்டங்களை நிறைவேற்றவில்லை. எங்கள் திட்டங்களையாவது விட்டு வைக்காமல் அதையும் அழித்து வருகின்றனர்.

ஜெயலலிதா பெண்களுக்காக கொண்டு வந்த இருசக்கர வாகன திட்டத்தை திமுக நிறுத்திவிட்டது. அந்த திட்டத்தை நாங்கள் செயல்படுத்த மாட்டோம் என்று வெளிப்படையாகவே சொல்லி விட்டனர்.

ஏழைப்பெண்களுக்கு கொடுக்கப்படும் தாலிக்கு தங்கம் திட்டத்திற்கு இத்தனை கட்டுப்பாடுகள் விதிக்கப் படுவது ஏன்?

அம்மா மினி கிளினிக்குகள் அனைத்தும் மூடப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் அம்மா உணவகத்தின் விளம்பரப் பலகைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதன் மூலம் அம்மா உணவகத்தில் விற்பனை என்பது குறைந்து வருகிறது.

நீட் தேர்வு நடத்த மத்திய அரசு கூறிய நிலையில், உச்சநீதிமன்றமும் நீட் தேர்வை நடத்த வேண்டும் என கூறிவிட்ட நிலையிலும், சட்டத்தில் எங்காவது வாய்ப்பு உண்டா என ராஜதந்திரத்தோடு யோசித்த அன்றைய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி 7.5 சதவீத இட ஒதுக்கீட்டை கொண்டு வந்து இன்று ஒரே ஆண்டில் ஆயிரம் மருத்துவர்கள் உருவாகியுள்ளனர்.

கான மயிலாட கண்டிருந்த வான்கோழி தானும் ஆட என பொறியியல் படிப்பிற்கு 7.5 சதவீத இட ஒதுக்கீட்டை திமுக கொண்டு வருகின்றனர். பொறியியல் படிப்பில் இட ஒதுக்கீடு எதற்கு?

ஏற்கனவே பொறியியல் கல்லூரிகள் மூடப்பட்டு வருகின்றன. தமிழ்நாட்டில் இந்த ஆண்டு மட்டும் 20 பொறியியல் கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன.

திமுக அரசு தீர்மான வடிவிலேயே உள்ளது.

வேறு வழியில்லாமல் நீட் தேர்வு, வேளாண் சட்ட தீர்மானங்களை அதிமுக ஆதரிக்க வேண்டி இருந்தது.

நீட் தேர்வை நாங்கள் ஆட்சிக்கும் வந்ததும் நிறுத்துவோம், ராஜதந்திரத்தை கொண்டு நீட் தேர்வை முறியடிப்போம் என கூறிய திமுக நீட் தேர்வை நிறுத்திவிட்டார்களா?

நாங்கள் சட்டமன்றத்தில் போட்ட சட்டத்தை தான் நீங்களும் போட்டு உள்ளீர்கள். நீட் தேர்வை நிறுத்த முடிந்ததா?

பேரறிவாளன் உட்பட 7 பேர் விடுதலைக்கு சட்டமன்றத்தில் தீர்மானம் இயற்றி ஆளுநரிடம் கொடுத்தும் அவர் கையெழுத்து போடவில்லை.

ஆனால் திமுகவினர் ஆட்சிக்கு வந்ததும் ராஜீவ் கொலை வழக்கில் சிறையிலுள்ள ஏழுபேரை விடுதலை செய்ய தீர்மானம் இயற்றி ஆளுநர் கையெழுத்தை பெறுவோம் என சொன்னீர்களே? அவர்களை விடுதலை செய்தீர்களா?

நீட்தேர்வு, வேளாண் சட்டம், ஏழுதமிழர் விடுதலை என அனைத்திற்கும் தீர்மானம் மட்டுமே இயற்றி எதையுமே திமுக நிறைவேற்ற முடியவில்லையே?

ஒவ்வொரு குடும்பப் பெண்களுக்கும் ஆயிரம் ரூபாய் கொடுக்கப்படு என வாக்குறுதியில் சொன்னதை கொடுக்க முடிந்ததா?

திமுக பதவியேற்ற ஐந்து மாதமாக பெண்களுக்கு ஆயிரம் ரூபாய் கொடுக்கவில்லை.

ஆட்சி பொறுப்பேற்று 5 மாதம் ஆன திமுக அரசு பெண்களுக்கு 5,000 ரூபாய் கடன் பட்டிருக்கிறது.

அதிமுக ஆட்சியில் மக்களுக்கு எல்லாமே கொடுத்திருக்கிறோம். மக்களுக்கு எல்லாம் செய்தபின்பு தான் 5 லட்சம் கோடி கடன் ஏற்பட்டது.

ஆனால் மக்களுக்காக செய்ததற்று ஏற்பட்ட 5 லட்சம் கோடி கடனை அதிமுக ஆட்சியில் 5 லட்சம் கோடி கடன் என கூறி நிதியமைச்சர் வெள்ளை அறிக்கை வெளியிட்டார்.

திமுக ஆட்சி பிளாக் மார்க் வெள்ளையறிக்கையில் ஐந்து லட்சம் கோடி கடன் என கூறி ஒன்றும் செய்ய முடியாது என கூறி விட்டனர்.

ஆனால் எடப்பாடியார் ஆட்சி தொடர்ந்திருந்தால் நிர்வாக சீர்திருத்தங்களை மேற்கொண்டு மக்களுக்கு செய்ய வேண்டியவற்றை செய்திருப்போம்.

லட்சம் கோடி கடன் வாங்கினால் நஷ்டம் தான். ஆனால் மக்களுக்கு செய்வதற்காகவே கடன் வாங்கினோம்.

நாங்கள் கடன் வாங்கினால் அதை கருப்பன், சுப்பன், என ஏழைகளிடம் மக்களிடமா கேட்க போகிறோம்.

கடன்பெற்ற எங்களிடம் தானே கேட்க போகிறார்கள். கடன் வாங்கினால் அரசாங்கத்தை தான் கேட்பார்கள்.

எங்கள் ஆட்சியில் டெண்டர் விடப்பட்ட சாலை பணிகளை தற்போது ரத்து செய்துள்ளார்கள். கேட்டால் பணம் இல்லை என்கிறார்கள். கோவிலில் மட்டுமே பணம் வருகிறது அதை வைத்து மட்டுமே செலவழிக்கிறோம் என கூறுகின்றனர்.

திமுக அரசு தோல்வியடைந்த அரசாக உள்ளது.

பிரதமர் மோடி நாடாளுமன்ற கட்டிடத்தை சுற்றி பார்த்து வந்துவிட்டார். இன்னும் மூன்றே ஆண்டுகளில் நாடாளுமன்ற தேர்தலோடு சேர்த்து சட்டமன்றத்திற்கு தேர்தல் வரும். அப்போது தமிழ்நாட்டின் முதல்வராக எடப்பாடியார் பதவியேற்பார். நாடாளுமன்றத்திற்கும், சட்டமன்றத்திற்கும் ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற அடிப்படையில் தேர்தல் வரப்போகிறது.

திமுக அரசால் உருவாக்கப்பட்ட ரகுராம் ராஜன் தலைமையிலான பொருளாதார குழு 150 நாட்களில் கொண்டு வந்த திட்டம் என்ன?

திமுக அரசு நிரந்தரமான எந்த திட்டங்களைக் கொண்டு வரவில்லை.

உடல் நலம் சரியில்லாத குழந்தையையும், சுகம் இல்லாதவர்களையும் நேரில் சென்று சந்தித்து சிறிய அளவில் நிதி வழங்குகிறார்.ஒரு முதலமைச்சர் என்பவர் லட்சக்கணக்கில் நிதி வழங்க வேண்டும்.

திமுக குறித்து பேப்பர் பத்திரிக்கை ஊடகங்களில் மட்டுமே செய்தி வருகிறதே தவிர தவிர அடிப்படையாக ஒன்றுமே செய்யவில்லை.

அதிமுகவை யாராலும் எந்த காலத்திலும் அழிக்க முடியாது. அதிமுக தொண்டன் வேகமாகவும் விவேகமாகவும் இருப்பான்.

மத்திய அரசு நிதி தான் அதிகமாக வருகிறது. அம்ருத் திட்டம், ஸ்மார்ட் சிட்டி திட்டம் என பல்வேறு திட்டங்களுக்கு மத்திய அரசு தான் 75 சதவீதம் நிதி தருகிறது. எனவே அதிமுகவும், மதுரை மாநகராட்சியும் இணைந்துதான் மதுரையில் பல்வேறு பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

நகை கடன் தள்ளுபடியில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

கூட்டுறவு சங்கத்தை கலைக்கலாம் என முடிவு செய்கிறார்கள். எல்லாவிதமான முடிவையும் திமுக எடுத்து வருகின்றனர். அதனை தடுக்கவேஎதிர்க்கட்சித் தலைவரும், எதிர்க்கட்சித் துணைத் தலைவரும் மாவட்டம் மாவட்டமாக சென்று பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

தோல்விக்குப் பிறகு தேர்தலில் போட்டியிட கட்சிக்காரர்கள் நான், நீ என சண்டை போட்டுக் கொள்கின்றனர். போட்டி போட்டுக் கொண்டு வேலை பார்க்கின்றனர். வாதாடி சீட்டு கேட்கின்றனர்.

திமுவிற்கு எப்போதும் கெட்ட பெயர் தான் உள்ளது. அந்த பெயரை சரி செய்ய முடியாது.

கூலிப்படைக்கு திமுக ஆதரவு தருவார்கள் என்ற நம்பிக்கையில்தான் துணிந்து கூலிப் படையினர் தொடர்ந்து கொலை செய்து வருகிறார்கள்.

அதிமுக ஆட்சியில் குடும்ப பிரச்சினை வேறு ஏதாவது காரணங்கள் தான் கொலைகள் நடந்தன.

ஆனால் திமுக ஆட்சியில் நடப்பது அனைத்தும் கூலிப்படையினர் செய்யும் கொலைகள்.

காலையில் நாளிதழ்களை பார்த்தாலே கொலை தான் கண்ணுக்கு தெரிகிறது.

3500 பேர் கைது செய்ததாக டிஜிபி கூறுகிறார் கைது செய்து அடுத்த நாளே மதுரை காவல் ஆணையர் அலுவலகம் அருகே பெண்களிடம் செயின் பறிப்பில் திருடர்கள் ஈடுபட்டுள்ளனர்.

அடையாளம் உள்ள கைதியை கைது செய்த அரசாங்கம் அடையாளம் காட்டப்படாத கைதிகளை கைது செய்யவேண்டும்.

அதிமுகவில் அப்பாவிகளை பார்க்கமுடியும் திமுகவில் அப்பாவிகளை பார்க்க முடியாது.

திமுக பெண்களுக்கு எதை இலவசமாக கொடுத்தாலும் தமிழகப்பெண்கள் எம்.ஜி.ஆரையும், ஜெயலலிதாவின் தான் நம்புவார்கள், என்று திருப்பரங்குன்றம் எம் எல் ஏ ராஜன் செல்லப்பா பேசினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *