சமூக சீர்திருத்தவாதிகளான ஸ்ரீநாராயண குரு மற்றும் தந்தை பெரியார் குறித்த பாடங்களை 10ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடத்திட்டதிலிருந்து கர்நாடக அரசு நீக்கியுள்ளது.
சமீபத்தில் பா.ஜ.க அரசு ஆளும் கர்நாடகா மாநிலத்தில் ஆர்.எஸ்.எஸ் நிறுவனர் கே.பி.ஹெட்கேவார் குறித்து பள்ளிப் பாடப் புத்தகங்களில் சேர்த்ததற்கு முன்பே கண்டனங்கள் எழுந்து வருகிறது. இந்த சூழ்நிலையில் கர்நாடக பாடநூல் கழகம் தன் இணையதளத்தில் வெளியிட்ட 10ஆம் வகுப்பு புதிய சமூக அறிவியல் பகுதி-1 பாடப்புத்தகத்தின் PDFல் சமூக சீர்திருத்தவாதிகளான தந்தை பெரியார், ஸ்ரீ நாராயண குரு போன்றோர் குறித்த பாடங்கள் நீக்கப்பட்டிருப்பது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. இவற்றிற்கு கண்டனம் தெரிவித்து தட்சிண கன்னடா மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவரான கே.ஹரீஷ் குமார் கூறியதாவது “இந்த வருடம் ஏப்ரலில் நடைபெற்ற சிவகிரி யாத்திரையின் 90வது ஆண்டுவிழாவில் ஸ்ரீ நாராயணகுருவின் பிரசங்கங்களை பிரதமர் நரேந்திர மோடி பாராட்டியது வெறும் நாடகமா..? நாராயணகுரு மற்றும் பெரியார் பற்றிய பாடங்கள் ஒதுக்கப்பட்டது வன்மையாகக் கண்டித்தக்கது. இந்த மாபெரும் சமூகசீர்திருத்த ஆளுமைகளைப் குறித்த பாடங்களை பாஜக அரசு உடனே பாடப்புத்தகத்தில் மீண்டுமாக சேர்க்க வேண்டும்.
அவ்வாறு செய்ய தவறினால் வருகிற நாட்களில் பெரும் விளைவை சந்திக்க வேண்டி இருக்கும்” என்று தெரிவித்துள்ளார். அதனைத்தொடர்ந்து செய்தியாளர் சந்திப்பில் பேசிய காங்கிரஸ் முன்னாள் எம்.எல்.ஏ. ஜே.ஆர் லோபோ கூறியதாவது “இந்த நடவடிக்கையானது மாபெரும் சமூக சீர்திருத்தவாதியை அவமானப்படுத்துவதாகவும், பாடப்புத்தகங்கள் இதுவரை அச்சிடப்படாமல் உள்ளதால் பாடத்தை மீண்டும் சேர்க்க அரசுக்கு இன்னும் காலஅவகாசம் இருக்கிறது” எனவும் தெரிவித்தார்.