அ.தி.மு.க.வில் விரைவில் உள்கட்சி தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்காக செயற்குழு மற்றும் பொதுக்குழு அடுத்த மாதம் கூடுகிறது.
சசிகலாவை அ.தி.மு.க.வில் சேர்த்து கொள்வது குறித்து கட்சியின் நிர்வாகிகள் கூடி முடிவெடுப்பார்கள் என ஓ.பன்னீர்செல்வம் கடந்த சில வாரங்களுக்கு முன்பு கூறியிருந்தார். இந்த கருத்து அ.தி.மு.க.வினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.
அ.தி.மு.க.வில் சசிகலாவை சேர்க்கலாமா? வேண்டாமா? என்ற குழப்பம் நீடித்து வரும் நிலையில், அ.தி.மு.க உள்கட்சி தேர்தல் விரைவில் நடத்தப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.
முதலில், அ.தி.மு.க. கிளை கழக தேர்தல் நடத்தப்படும். அதன்பிறகு, ஒன்றிய கழகம், பேரூர், நகர கழகம், மாவட்டம் அளவிலான பதவிகளுக்கு தேர்தல் நடத்தப்படும். இறுதியாக, தலைமைக் கழக நிர்வாகிகள் தேர்தல் நடக்கும்.
அ.தி.மு.க. உள்கட்சி தேர்தல் தொடர்பான அறிவிப்பு இம்மாதம் வெளியிடப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.
முதலில் உள்கட்சி தேர்தல், அடுத்து கட்சியின் செயற்குழு, பொதுக்குழு கூட்டம் என அ.தி.மு.க.வில் அடுத்தடுத்த நிகழ்வுகள் நடைபெற இருக்கிறது. செயற்குழு, பொதுக்குழு அடுத்த மாதம் இறுதியில் நடைபெறும். உள்கட்சி தேர்தலுக்கான அறிவிப்பு இம்மாதம் 10ஆம் தேதிக்கு பிறகு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.