• Mon. Mar 17th, 2025

மாநிலங்களவை உறுப்பினராக சோனியாகாந்தி பதவியேற்பு

Byவிஷா

Apr 4, 2024

ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியாகாந்தி மாநிலங்களவை உறுப்பினராக இன்று பதவியேற்றுக் கொண்டார்.
நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 54 மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் நிறைவடைந்தது. அதனை தொடர்ந்து புதிய உறுப்பினர்களை தேர்வு செய்வதற்காக நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், மூத்த தலைவருமான சோனியாகாந்தி ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். இந்த நிலையில் புதிய உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ள சோனியா காந்தி இன்று மாநிலங்களவை உறுப்பினராக பதவியேற்றுக்கொண்டார்.
நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள மாநிலங்களவை துணை தலைவர் ஜெகதீப் தங்கர் அறையில் நடைபெற்ற பதவியேற்பு நிகழ்வில் சோனியாகாந்திக்கு பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்துவைக்கப்பட்டது. சோனியா காந்தி இந்தியில் உறுதிமொழி எடுத்து பதவியேற்றுக் கொண்டார். இந்த நிகழ்வில் காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மாநிலங்களவை முன்னவர் பியூஷ் கோயல், மாநிலங்களவை துணை தலைவர் உள்ளிட்ட பலரும் கலந்துக் கொண்டனர்.